சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா? - வருத்தம் தெரிவித்த அமைச்சர்

 
ma Subramanian

தமிழக ஆளுநர் குறித்து திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் பேசிய போது,  ஆளுநர் உரை நிகழ்த்தியபோது பேப்பரில் எழுதிக் கொடுத்தபடி படித்திருந்தால் அவர் காலில் பூ போட்டு அனுப்பி இருப்போம்.   ஆனால் தமிழகத்திற்கு, இந்தியாவிற்கு சட்டத்தை எழுதி கொடுத்த எங்கள் முப்பாட்டன் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் ஆளுநரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உள்ளது என்றார். மேலும் ஆளுநரை தகாத வார்த்தைகளில் மிகவும் அநாகரிகமான வார்த்தைகளில்  திட்டியுள்ளார் . மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளார்.   இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.  இதை அடுத்து ஆளுநர் மாளிகை ராஜ்பவன் துணை செயலாளர் பிரசன்ன ராமசாமி சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்திருக்கிறார்.  

sivaji

இந்நிலையில், திமுக பேச்சாளரின் கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். . சென்னை சைதாப்பேட்டையில் கலைஞர் கணினி கல்வியகம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: திமுக மேடையில் ஒருவர் அநாகரிகமாக பேசினால் அது வருந்தக்கூடியது. இது போன்ற செயல்களை முதல்வர் எப்போதும் ஆதரிகமாட்டார். பேச்சாளர்கள் நாகரிகம் கருதி அரசின் சாதனைகளை எடுத்து சொல்ல வேண்டும். இது போல் திமுகவை சேர்ந்த ஒருவர் பேசியதற்கு வருந்துகிறோம். ஆளுநர் குறித்து பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா என தெரியவில்லை. இவ்வாறு கூறினார்.