சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

 
ma

சென்னையில் மழைப்பொழிவு நின்றவுடன்  மாநகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து வார்டுக்கு ஒரு மருத்துவ முகாம் என்று சென்னை மாநகராட்சி முழுவதும் 200  மழைகால  சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என  அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கேகே நகரில் உள்ள ராஜமன்னார் சாலை, டாக்டர் ராமசாமி சாலை உள்ளிட்ட இடங்களில் மழை பாதிப்பு தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன்பிறகு  செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில்  கடந்த இரண்டு நாட்களாக பெய்யக்கூடிய மழை காரணமாக மழை நீர் தேக்கம் குறித்து கே.கே நகர் பகுதியில் ஆய்வு செய்தேன். சென்னையில் கடந்த காலங்களில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர்  தேக்கம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் திமுக பொறுப்பேற்ற பிறகு செய்யப்பட்ட பணிகள் காரணமாக தற்போது சென்னையில் 40 இடங்களாக குறைந்துள்ளது. இதில் கூட 9 இடங்களில் மட்டுமே மோட்டார் வைத்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 220 கிலோ மீட்டர் தூரத்திற்கு  மழை நீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு 157 கிலோ மீட்டர் பணி தற்போது  நிறைவு பெற்றுள்ளது.

Medical Camp

பெருங்குடி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என்று கடந்த காலங்களில் தண்ணீர் தேங்கிய எந்த பகுதியிலும் இந்த ஆண்டு தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் மழைப்பொழிவு நின்றவுடன்  மாநகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து வார்டுக்கு ஒரு மருத்துவ முகாம் என்று சென்னை மாநகராட்சி முழுவதும் 200  மழைக்கால  சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்” என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் , கே. கே. நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையிலும்  ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது  போது சட்டமன்ற உறுப்பினர் பிரபாகராஜா,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.