சென்னையில் இந்த முறை வெள்ளம் தேங்காது - அமைச்சர் கே.என்.நேரு உறுதி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த முறை தேங்கியது போல் இந்த முறை வெள்ளம் தேங்காது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில், வெள்ளத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஒத்திகை செய்துகாட்டினர். இந்த நிகழ்ச்சியை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: திருச்சி மாநகராட்சியில் உள்ள சாலைகளை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தார் போட்டால் பிடிக்காது. அதுமட்டுமல்லாமல் 40, 50 ஆண்டுகால குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டி இருக்கிறது. பாதாள சாக்கடை குழாய்கள், குடிநீர் குழாய்கள் பதிக்காமல் சாலையை போட்டாலும் வீணாகிவிடும். தற்போதைய நிலையில் 576 சாலைகளில் 276 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதனை வெளியேற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையை வெள்ளம் பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டது. திருப்புகழ் கமிட்டி பரிந்துரை செய்த படி ரூ. 935 கோடியில் எல்லா இடங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகளை வேகப்படுத்துமாறு ஒப்பந்ததாரர்களை வலியுறுத்தியுள்ளோம். இப்போது பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. எனவே இந்த முறை நிறைய வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இதனை முன்னின்று கவனித்து வருகிறார்கள். இவ்வாறு கூறினார்.