ஆழியார் குடிநீர் திட்டம் கைவிடப்படாது - அமைச்சர் கே.என்.நேரு உறுதி

 
nehru

ஆழியார் குடிநீர் திட்டம் கைவிடப்படவில்லை எனவும், விவசாயிகளின் சம்மதத்துடன் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.   

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- ஆழியாறு குடிநீர் திட்டம் கைவிடப்படவில்லை. விவசாயிகளின் சம்மதத்துடன் செயல்படுத்தப்படும். கேரளாவில் இருந்து வரவேண்டிய தண்ணீரை பெற்றுத்தரும்படி விவசாயிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்துக்கு ரூ.930 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எனவே மாற்று திட்டத்தில் காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கு ஆய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.