ரேசன் கடைகளில் இந்த பொருட்களை வாங்குமாறு கட்டாயப்படுத்த கூடாது - அமைச்சர் எச்சரிக்கை

 
I Periyasamy

ரேசன் கடைகளில் சோப்பு, அரிசிமாவு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்குமாறு குடும்ப அட்டை தாரர்களை வற்புறுத்த கூடாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் மண்ணெண்ணய், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றன. இதேபோல் சோப்பு, அரிசி மாவு, சேமியா உள்ளிட்ட இதர பொருட்களும் நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சோப்பு, அரிசி மாவு, சேமியா உள்ளிட்ட பொருட்களை வாங்காவிட்டால் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கிடையாது என சில ரேசன் கடைகளில் ஊழியர்கள் மிரட்டுவதாக செய்திகள் வெளியாகின. 
 
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் செய்தியளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,  ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது எனவும், அவ்வாறு யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த ரேசன்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் எனவும் கூறினார்.