செம்பரம்பாக்கம் ஏரி தீவிரமாக கண்காணிப்பு...எந்த அசம்பாவிதமும் நேராது - அமைச்சர் துரைமுருகன்

 
duraimurugan

செம்பரம்பாக்கம் ஏரி தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் எந்த அசம்பாவிதமும் நேராது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதரமாக விளங்கும் செம்பரம்மாக்கம் ஏரி, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது. வினாடிக்கு 3,675 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்ததோடு,  உபரிநீா் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். 

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஏரியை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது; செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும், பிரச்சினை இல்லை.16ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் மழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் எந்த அசம்பாவிதமும் நேராது. முகலிவாக்கம் ,மாங்காடு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட செம்பரம்பாக்கம் காரணமல்ல. இவ்வாறு கூறினார்.