நிரம்பியது மேட்டூர் அணை : கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

 
mettur

மேட்டூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.  அதுமட்டுமின்றி  கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆனைகள் நிரம்பியதால் அதிலிருந்து  வெளியேற்றப்படும் நீரும் வருவதால் காவிரியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,  நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில்,  நேற்று இரவு அது  30,000 கன அடியாக அதிகரித்தது.  அதனைத் தொடர்ந்து இன்று காலை 40 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில் ,  தற்போது 50,000 கன அடியாக  மீண்டும் அதிகரித்து இருக்கிறது.

மேட்டூர் அணை

 ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி மேட்டூர் அணையானது தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.   மேட்டூர் அணைக்கு வரும்  தண்ணீர் அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான்  தற்போது  அணைக்கு வரும்  50 ஆயிரம் கனஅடி தண்ணீர்  அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக நீர் மின் நிலையங்கள் வழியாக 23,000 கன அடி தண்ணீரும்,   உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 27, 000 கன அடி தண்ணீரும் என மொத்தம் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நிரம்பியது மேட்டூர் அணை! கரையோர மக்களுக்கு  எச்சரிக்கை

இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறையானது வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது.அதில்,  மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளது.   அணையின் நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படும்.   உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கன அடி வரை தற்போது திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்கப்படலாம்.  ஏனென்றால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட இருக்கிறது.  ஆகையால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகள் வசிக்கும் மக்கள் மேடான மற்ரும் பாதுகாப்பான  பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் செல்லும் கீழ் மாவட்டங்களான 11 மாவட்ட ஆட்சியர்களுக்கும்,  தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு  அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.