நீட் தேர்வு குளறுபடி... விடைத்தாளை நேரில் பார்க்க மாணவிக்கு அனுமதி - ஹைகோர்ட் மதுரைக்கிளை அதிரடி..

 
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

நீட் தேர்வு குளறுபடி விவகாரம் தொடர்பாக, விடைத்தாளை நேரில் ஆய்வு செய்ய மாணவி ஒருவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா  என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  அதில், “கடந்த வருடம் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவ படிப்பில் சேர விரும்பிய நான், கடந்த ஜூலை  மாதம்  நீட் தேர்வு எழுதி இருந்தேன்.  அந்த தேர்வில் நான் மொத்தம் உள்ள  700  கேள்விகளில்  141 கேள்விகளுக்கு சரியான பதிலை  தேர்வு செய்திருந்தேன் . இந்நிலையில் கடந்த மாதம்  தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விடை குறிப்புகளை வெளியிட்டிருந்தது.  அதன்படி,  எனக்கு 564 மதிப்பெண்கள் கிடைக்கும் என காத்திருந்தேன்.  அதேபோல் ஓஎம்ஆர் ஷீட் என்று சொல்லக்கூடிய விடைத்தாளையும் தேசிய தேர்வு முகமை தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.  அதில் தனக்கு 564 மதிப்பெண்கள் சரியாக கிடைக்கும் என்று நினைத்திருந்தேன்.  

நீட் தேர்வு

ஆனால் கடந்த 7  தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி  இருந்தது.  அதில் தனக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் 114 மதிப்பெண்கள் மட்டுமே போடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அதிலும் ஒரு குளறுபடி இருந்தது; 48% தேர்ச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.    48% தேர்ச்சி என்றால் கிட்டதட்ட 300 மதிப்பெண்களுக்கு மேல் இருக்க வேண்டும்.  ஆனால் 114 மதிப்பெண் மட்டுமே எனக்கு போடப்பட்டிருந்தது.  எனது விடைத்தாளில் குளறுபடி இருப்பதாக உணர்கிறேன்.  ஆகையால் எனது விடைத்தாளை நேரில் ஆய்வு செய்ய விரும்புகிறேன்.  அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் எனவும்,  மேலும் ஆய்வின்  முடிவில் வரக்கூடிய மதிப்பெண்ணை எனக்கு முழுமையாக வழங்க வேண்டும்” என்று  அந்த மாணவி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  NEET EXAM

இந்த மனு இன்று நீதிபதி பவானி, சுப்புராயன் அமர்வு  முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள்,   மாணவி மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்றால் இந்த தேர்வில் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்,  அதில் தேர்ச்சியும்  பெற்றிருக்க வேண்டும் என்பதால், அவரது கல்வி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு  மாணவி டெல்லியில் உள்ள நீட் தேர்வு முகமைக்கு நேரடியாக சென்று தனது விடைத்தாளை ஆய்வு செய்யலாம் என அனுமதி வழங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.