#BREAKING : சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் குளறுபடி - தமிழ் தேர்வு ரத்து

 
madras university

வினாத் தாளில் குளறுபடி நடந்துள்ளதால், உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற்ற தமிழ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இணைப்பு கல்லூரிகள் உறுப்பு கல்லூரிகளில் இன்று இரண்டாம் ஆண்டிற்குரிய மூன்றாவது செமஸ்டர் தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது.  இதில் 3வது செமஸ்டர் தேர்வு தமிழ் வினாத்தாளுக்கு பதிலாக கடந்தாண்டு நடைபெற்ற 4வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் ஆண்டு நான்காவது செமஸ்டர் தேர்வுக்குறிய கேள்வித்தாளை தேர்வுக்கு கொடுத்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இதனால் தேர்வில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று நடைபெற்ற தமிழ் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் விரைவில், மாற்று தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு வினாத் தாள் குளறுபடியால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.