எழுத்துப்பூர்வ சம்மன் மூலமே விசாரணைக்கு அழைக்கவேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

விசாரணைக்கு அழைக்க இனி எழுத்துப்பூர்வமாக மட்டுமே சம்மன் அனுப்பவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு வழக்கில் தொடர்புடைய தன்னை விசாரணைக்கு அடிக்கடி அழைப்பதாகவும், நேரம் காலம் இல்லாமல் அழைப்பதாகவும் இதனால் காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருப்பூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் மீது அளிக்கப்பட்ட புகார் நிலுவையில் இருக்கிறது. அது தொடர்பாக விசாரணை நடத்தவே அவர் அழைக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி, குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதிய அதிகாரங்களில் நீதிபதி தலையிடுவதில்லை என்று தெரிவித்தார். மேலும் விசாரணைக்கு அனுப்பும்போது எழுத்துப்பூர்வமாக சம்மன் அனுப்பவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அப்படி சம்மன் அனுப்பும்போது, அதில் ஆஜராக வேண்டிய நாள், நேரத்தை குறிப்பிட வேண்டும் என்றும், விசாரணையின்போது நடக்கும் நிகழ்வுகளை முழுமையாக குறிப்பெடுத்து வைக்க வேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்துவதாகவும், அதற்கு தடை விதிக்க கோரியும் பல மனுக்கள் தாக்கலாவதாக குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்கை தொடர்ந்துள்ள திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் விசாரணைக்கு அழைப்பதற்கான வழிமுறைகளை வகுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது