தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு உள்ளதா ? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

 
Ma Subramanian

தமிழகத்தில் நேற்று ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு  உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி, கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதனையொட்டி அதற்கான முன்பதிவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சென்னை வேளச்சேரி மின்சார ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களது பெயர்களை பதிவு செய்துகொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னை மக்களின் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் நடைபெற உள்ளது. மதுரையில் பெய்த கனமழை பாதிப்பு குறித்து வருவாய்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் வடிந்த பின்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. பாதிப்பு ஏற்பட்டால் நாங்களே ஊடக நண்பர்களை அழைத்து கூறுவோம். தற்போதைக்கு தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறோம். இதை போல திருச்சி, மதுரை, கோவையிலும் பரிசோதனை நடைபெற்று வருகிறது. நேற்று தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டதாக வந்த செய்தி உண்மை இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.