படிக்காமலேயே பட்டம் பெற்றவர் மோடி! சு.வெங்கடேசன் எம்பி விமர்சனம்

 
su venkatesan

"எங்கள் எய்ம்ஸ் எங்கே?" எனும் தலைப்பில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்கி பணிகளை துவங்க வேண்டும் என வலியுறுத்தியும் பழங்காநத்தம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடத்தப்பட்ட தொடர்முழக்க போராட்டத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

மதுரையில் நடந்த ‘எங்கள் எய்ம்ஸ் எங்கே‘ என்ற போராட்டத்தில் சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்டோர்.

போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, திமுக எம்.எல்.ஏ தளபதி, மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் உள்ளிட்டோர் செங்கல்லை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர். எய்ம்ஸ் மருத்துவமனை கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் செங்கலுடன் படுத்தவாறு வந்து பங்கேற்றார் தொண்டர் ஒருவர்.

கூட்டத்தில் பேசிய எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசுகையில், "2024ம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் முதல் பணியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்" என்றார். தொடர்ந்து பேசிய எம்.பி. சு.வெங்கடேசன், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெறும் போது கூட அவர்களால் கல்லூரியை கண்ணால் பார்க்க முடியாது. கண்ணால் பார்க்க முடியாத கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டம் கொடுக்கும் ஒரே பிரதமர் மோடி தான். ஏன் பிரதமர் மோடியே படிக்காமலேயே பட்டம் பெற்றவர் தான். அது தொடர்பான வழக்கு கூட நிலுவையில் உள்ளது. படிக்காமலேயே பட்டம் வாங்கிய பிரதமரால், கல்லூரியை பார்க்காமலேயே மாணவர்கள் பட்டம் வாங்கும் அவலத்தை மாற்றவே போராடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.