ஓபிஎஸ் மகன் வேண்டாம்; அவரது நிதி மட்டும் வேணும்! எடப்பாடி தரப்பினரின் அதிரடி

 
உசிலம்பட்டி

ஒ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தின் நிதியிலிருந்து கட்டப்படும் கட்டமைப்புக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் பூமி பூஜை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் 1920 ம் ஆண்டு ஆங்கிலேயரின் கைரேகை சட்டத்திற்கு எதிராக போராடி துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த மாயக்காள் என்ற பெண் உட்பட 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக பெருங்காமநல்லூரில் நினைவு மண்டபம் அமைப்பதற்கு கடந்த அதிமுக அரசு 147 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் அருகில் நுழைவு வாயில் அமைப்பதற்கு உசிலம்பட்டி எம்எல்ஏ நிதியிலிருந்து 10 லட்சமும், துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த இடத்தில் தேனி எம்பி -யும் ஒபிஎஸ் -ன் மகனுமாகிய ரவீந்தீரநாத் - ன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பீட்டில் அனையாவிளக்கு மண்டபம் அமைப்பதற்கும் என மொத்தம் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் கட்டமைப்புகளுக்கு உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ அய்யப்பன், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். ஒபிஎஸ் -ன் மகனும் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒ.பி.ரவீந்திரநாத்தின் நிதியிலிருந்து கட்டப்படும் கட்டமைப்புக்கு எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும், ஆர்.பி.உதயக்குமாரின் தீவிர விசுவாசியான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்த சம்பவம் உசிலம்பட்டியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.