36% இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள் தான்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

 
Mkstalin

44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், “உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன். இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நாளாக இது அமைந்துள்ளது. நேரு விளையாட்டு அரங்கிற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விழா அமைந்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்தபோது 20 ஆயிரம் வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி. முதன்முறை இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் நடப்பது நமக்கு பெருமை.

இதுபோன்ற பன்னாட்டு விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய குறைந்தது 18 மாதங்களாகும். ஆனால் 4 மாதத்தில் பன்னாட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்தது. துணை நின்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழ்நாட்டின் மதிப்பும், தமிழ்நாட்டின் பெயரும் இன்று முதல் மேலும் உயரும். மொத்தம் 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 36% இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள் தான். செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது பெருமை. இதுபோன்ற வாய்ப்புகளை தொடர்ந்து தமிழகத்திற்கு தர வேண்டும். செஸ் அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல; அறிவை நம்பிய விளையாட்டு. ஆதிகாலத்தில் சதுரங்க விளையாட்டுக்கு ஆனைக்குப்பு என்ற பெயர் இருந்துள்ளது.போர் மரபுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருப்பதை கீழடி சொல்கிறது” என பேசினார்.