அரசியலில் ‘வாரிசு’ எனக் கூறி விமர்சனம் செய்வர்... மு.க.ஸ்டாலின்

 
mkstalin

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை, மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில்  நடைபெற்ற 43ஆவது வழுவூரார் நடனம் மற்றும் இசை விழாவில் கலந்து கொண்டு, வழுவூரார் விருதுகள் வழங்கி, சிறப்புரையாற்றினார். அப்போது வழுவூரார் விருதை வயலின் இசை கலைஞர் கலைமாமணி கன்னியாகுமாரிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார். 

பின்னர் மேடையில் பேசிய முக ஸ்டாலின், “வழுவூரார் அவர்களின்  கலையின் தரம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால், கலைஞர்களும், ரசிகர்களும் இக்கலையின் பெருமையையும், கலையின் நுணுக்கங்களையும் ஓரளவிற்கு அறிந்திருக்க வேண்டிய அவசியம். கலைத் திறமை உள்ளவர்கள் நல்ல ஆசிரியர்களிடம் இக்கலைகளைக் கற்றுக் கொண்டு கலைகளை காலமெல்லாம் வளர்க்க துணை புரிய வேண்டும். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலைகள் என்பவை தமிழ்ப் பண்பாட்டைக் காலம் காலமாக வளர்த்தெடுக்கும் பணியைச் செய்து வருகின்றன. 

Image

தமிழும் - தமிழ்நாடும் பல்லாயிரம் ஆண்டு காலம் நின்று நிலைக்க இத்தகைய கலை இலக்கியங்கள் தான் அடிப்படையான காரணம்.  எத்தனையோ படையெடுப்புகளை தமிழ்நாடு சந்தித்துள்ளது. அத்தனை படையெடுப்புகளையும் தாங்கி நின்று செழிக்க நமது கலை, இலக்கியங்கள்தான் காரணம். இந்திய விடுதலைக்காக வழுவூரார் அவர்கள் நாட்டியக் கலையை அன்றே பயன்படுத்தியதைப் போல இன்று இருப்பவர்களும் தமிழைக் காக்கவும், தமிழ்நாட்டைக் காக்கவும் தங்கள் கலையை பயன்படுத்த வேண்டும்.

நவீனக் கலையில் நவீனக் கருத்துகள் பகுத்தறிவுக் கருத்துகள் அறிவுப்பூர்வமான கருத்துகள், சமூக மேன்மைக்கும் மக்களை நல்வழிப்படுத்தும் கருத்துக்கள் இடம் பெற வேண்டும். நவீன வடிவங்களை மட்டுமல்ல, நவீன எண்ணங்களையும் இந்தக் கலையில் பயன்படுத்தப்பட வேண்டும்.நாட்டிய உலகமாக இருந்தாலும், இசை உலகமாக இருந்தாலும் அதில் வழுவூரார் குடும்பத்திற்கு மகத்தான ஒரு இடம் உண்டு. குடும்பம் குடும்பமாக தலைமுறை தலைமுறையாக என்று சொல்வதைப் போல இதைச் சொல்லுகிறபோது, அரசியலில் இருந்தால் வாரிசு என்று சொல்லி விடுவார்கள். அதை விமர்சனமும் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி, அதையெல்லாம் மீறி இன்றைக்கு இசைக்கும் நாட்டியத்திற்கும் தொண்டாற்றிய ஒரு குடும்பமாக வழுவூராருடைய குடும்பம் விளங்கிக் கொண்டிருக்கிறது” என்றார்.