"ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை அழிக்க நினைக்கிறது பாஜக" மு.க.ஸ்டாலின் பேச்சு

 
mkstalin

திருவள்ளூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

mkstalin

அப்போது பேசிய அவர், “தமிழில் வணக்கம் சொல்வது, பாரதியார், திருவள்ளுவரை மேற்கோள்காட்டி பேசுவது மூலமாக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது. ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை அழிக்க நினைக்கிறது பாஜக. இந்தி மொழியை திணிக்க பாஜக தொடர்ந்து முயற்சித்துவருகிறது. தமிழுக்காக உயிர் நீத்தவர்கள்தான் மொழிப்போர் தியாகிகள், ஒவ்வொரு தமிழரும் நினைவுக் கூர வேண்டும் நாள் மொழிப்போர் வீரவணக்க நாள். உலகம் முழுவதும் தமிழ்நாடு மாணவர்கள் வலம்வருவதற்கு ஒருமொழி கொள்கைதான் காரணம். தமிழ்மொழியை காப்பத்தில் இன்றுவரை உறுதியாக இருக்கிறேன்.

தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் விரோதமான சக்திகள் யாராக இருந்தாலும், தேர்தல் களத்தில் மட்டுமல்ல, அரசியல் களத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும். இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல, தமிழினத்தை, தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாக நாம் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். பல்வேறு மொழி பேசுபவர்களின் நாடாக இருந்தாலும் ஒரு மொழியின் ஆதிக்கம் இருக்காது என்பதை இந்தியாவை ஆண்ட பிரதமர்கள் உறுதிப்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படாது. அவர்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும் என  பிரதமர் நேரு அளித்த உறுதி மொழி தான் இன்று இந்தி பேசாத பெரும்பான்மை மக்களைக் காக்கும் அரணாக இருக்கிறது.

இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தி திணிப்பையே நாங்கள் எதிர்க்கிறோம். இந்தி மொழி படிப்பதை நாங்கள் என்றைக்குமே எதிர்க்கவில்லை. இந்தியைக் கட்டாயமாக புகுத்தி இன்னொரு மொழிப் போரைத் திணிக்காதீர். எங்கள் தாய்மொழி உணர்வை உரசிப் பார்க்காதீர். ஆட்சி நிர்வாகத்தால் இந்தியைத் திணிப்பது தொடங்கி கல்வி மூலமாகத் திணிப்பது வரை தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியை திணிப்பதுதான் என பாஜக நினைக்கிறது” எனக் கூறினார்.