பதவியை காப்பாற்ற எதையும் செய்துவிட முடியாது- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சுப.வீரபாண்டியன், ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா நூல்களை முதலமைச்சர் வெளியிட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

Image

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தந்தை சீனிவாசனை போல மகன் டி.கே.எஸ் இளங்கோவனும் பேச்சிலும் எழுத்திலும் வல்லவராக இருக்கிறார். கலைஞரிடம் அதிகம் திட்டு வாங்கியவர் இளங்கோவன். அவர் மீது கொண்ட அன்பால் உரிமையால் திட்டுவார். எங்கள் யாரையும் கலைஞர் அந்தளவுக்கு திட்டியதில்லை. குடும்ப பாச உணர்வோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன். அண்ணன் சீனிவாசனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுள்ளேன். திமுக என்றால் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள்,முற்போக்குவாதிகள் நிறைந்த இயக்கம் மொத்தத்தில் இது ஓர் அறிவு இயக்கம். இன்று திமுக தார் சாலையில் பயணம் செய்து வருகிறது,இந்த தார்ச் சாலையை அமைக்க தாரோடு உருகிய பலர் இருக்கின்றனர்.அதில் ஒரு டி.கே.சீனிவாசன் என கலைஞர் கூறுவார். கலைஞர் குறித்து டி.கே.சீனிவாசன் விமர்சனம் செய்வார்.அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு கலைஞர் உதவி செய்தார்.

கொள்கை இருந்தால் தான் கட்சி, கட்சி இருந்தால் தான் ஆட்சி. கொள்கையை காப்பாற்றுவதற்காக எதையும் செய்யலாம் எதையும் இழக்கலாம். பதவியைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்து விடக்கூடாது. கள்ளிச்செடிகள் நிறைந்த கட்டாந்தரையாக இருந்த தமிழகத்தை ஒழுங்கு படுத்தி உயர்த்தியவர் பெரியார், அதில் எப்படிப்பட்ட கட்டிடம் அமைய வேண்டுமென திட்டமிட்டவர் அண்ணா,திட்டமிட்டபடி கட்டிடத்தை கட்டி முடித்தவர் கலைஞர்,தமிழ்நாடு என்ற கட்டிடத்தை காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது என்று அனைவரும் உறுதி எடுத்துகொள்வோம்” எனக் கூறினார்.