மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம் நமது தமிழ் இனம்- மு.க. ஸ்டாலின்

 
mkstalin

46-ஆவது சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழா மற்றும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பொற்கிழி விருது வழங்கும் விழாவில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் நடைபெற்றது. 

Tamil Nadu Chief Minister MK Stalin tests positive for Covid-19- The New  Indian Express

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறக்கூடிய 46-ஆவது புத்தகக் காட்சியை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 'தாய்க்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகன்' நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் அமைந்துள்ள நூற்றாண்டு நினைவு நூலகத்தில், அந்த நூலகத்தில் அமைந்திருக்கக்கூடிய அரங்கத்தில் இலக்கியத் திருவிழாவை இன்று காலையில் நான்  தொடங்கி வைத்தேன். அதைத் தொடர்ந்து மாலையில் இந்த புத்தகக் காட்சியைத் தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். ஆக, இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே நம்மைப் பொறுத்தவரையில் திருவிழாக்கள். அதுவும் அறிவுத் திருவிழாக்களாக அமைந்திருக்கிறது, இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால் தமிழ்த் திருவிழாக்களாக அமைந்திருக்கிறது என்று சொன்னால், அது மிகமிக பொருத்தமாக இருக்க முடியும்.

தமிழ்நாட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி தமிழாட்சி என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதற்குச் சான்றுகளாகத்தான் இந்த காலை நிகழ்ச்சியும், மாலை நிகழ்ச்சியும் அமைந்திருக்கிறது. ஒருகாலத்தில் சென்னையில் மட்டுமே புத்தகக் கண்காட்சி நடந்து வந்தது. அதைத் தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் நடக்கக்கூடிய வாய்ப்பைப்  பெற்றிருக்கிறது.  புத்தக வாசிப்பில் ஆர்வம் இருக்கக்கூடிய ஆட்சித் தலைவர்கள், அந்த ஆட்சியர்கள் அவரவர் மாவட்டத்திலே அதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். அந்த புத்தகக் கண்காட்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் இந்த புத்தகக் காட்சிகள் நடத்துவதற்கு நம்முடைய அரசு ஆணையிட்டது. அதற்காக 5 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடும் செய்திருக்கிறோம்.  அதன் விளைவாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கத் தொடங்கி இருக்கின்றன. பத்து நாட்கள், இரண்டு வாரங்கள் என நடக்கும் இந்த புத்தகச் சந்தைகள் மூலமாகப் புத்தக விற்பனை மட்டுமல்ல - சிறப்பான சொற்பொழிவாளர்களைக் கொண்ட இலக்கிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலமாக மாவட்டந்தோறும் இலக்கிய எழுச்சி - அறிவு மலர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

வழக்கமாக, சென்னைப் புத்தகக் காட்சிக்காக அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோய் வந்த காரணத்தால், பதிப்பாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலை மனதில்  கொண்டு  பபாசி அமைப்பினர் கூடுதல் நிதியை அரசிடம் கேட்டார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உடனடியாக அதை ஏற்று 50 லட்சம் ரூபாயை அன்றைக்கு அரசின் சார்பில் நாம் வழங்கினோம். இந்தத் தொகை சங்க உறுப்பினர்களாக இருக்கும் 277 பேருக்கு தலா 14 ஆயிரம் ரூபாயும் - உறுப்பினர் அல்லாத 113 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். பதிப்பகங்களுக்கு உதவிகள் செய்வதும், எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்குவதும் நாட்டில் அறிவொளி பரவ வேண்டும் என்பதற்காகத்தான். 'வீட்டுக்கு ஒரு நூல் நிலையம் அமைய வேண்டும்' என்று ஆசைப்பட்டவர் நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள். அத்தகைய நோக்கத்தை உருவாக்கவே, மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சிகளையும், இலக்கிய விழாக்களையும் நடத்துவதற்கு அனைத்து விதமான உதவிகளையும் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது.

Be careful with your words and actions, Tamil Nadu CM MK Stalin tells party  cadre | Cities News,The Indian Express

தமிழின் மீதும் புத்தகங்களின் மீதும், எழுத்தின் மீதும், எழுத்தாளர்கள் மீதும் மாறாக் காதல் கொண்டவர்  நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இதுபோன்ற கண்காட்சியின் தொடக்க விழாவுக்காக கடந்த 2008-ஆம் ஆண்டு  அன்றைக்கு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நம்முடைய  கலைஞர் அவர்கள் உரையாற்றினார்கள், சிறப்பித்தார்கள். ஒரு கோடி ரூபாயை வழங்கி, எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் பொற்கிழி விருது வழங்கி உற்சாகப்படுத்தச் சொன்னார்கள்.

அடுத்த ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞருடைய நூற்றாண்டாக அமைந்திருக்கக்கூடிய நிலையில், 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரக்கூடிய இந்த விருதைப் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வரை 100 பேர் என்ற எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. எத்தனைப் பொருத்தமாக அமைந்திருக்கிறது என்பதை எண்ணி நாம் மகிழ்ச்சி அடைகிறோம். எழுத்தாளர்களையும், அதேபோல எழுத்தையும் பாராட்டுவதை தன்னுடைய இயல்பாக, ஒரு வாழ்க்கையின் ஓர் அங்கமாக வைத்திருந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அரசியலில் எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தாலும் அவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக இருந்தால் அவர்களைப் பாராட்டுவதற்கு தயக்கமோ, சுணக்கமோ காட்டமாட்டார் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். சிறந்த எழுத்தைப் போலவே சிறந்த எழுத்தைப் பாராட்டுவதும் முக்கியமானது என்று அந்த நோக்கத்தோடுதான் ஒரு கோடி ரூபாய் நிதியை தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு வழங்கினார்கள். அந்த நிதி, அவருக்குப் பின்னாலும் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தப் பயன்பட்டு வருகிறது.

2007-ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்த அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள், சென்னையில் மிகப் பிரம்மாண்டமான நூலகம் அமையப் போகிறது என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அதுதான் சென்னையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்!

அதேபோல் மதுரையில் கலைஞர் அவர்கள் பெயரால் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் அமைக்க இன்றைய அரசு திட்டமிட்டு - அது பிரமாண்டமாக எழுந்து வருகிறது. விரைவில் அது திறக்கப்படவிருக்கிறது என்ற அந்த மகிழ்ச்சியான செய்தியை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 173 நூல்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அரசின் சார்பில் வெளியிட்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதனால்தான் போட்டி போடக்கூடிய அளவுக்கு அரசும் புத்தக வெளியீடுகளில் இறங்கி இருக்கிறது என்று நான் பெருமையோடு சொன்னேன். கால்டுவெல்லின் 'திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலை மொழி அறிஞர் பா.ரா.சுப்பிரமணியம் அவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். அவருக்கு இன்று தலைவர் கலைஞர் அவர்கள் பெயரில் அமைந்திருக்கக்கூடிய விருது வழங்கப்பட்டிருப்பதை அறிந்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று காலையில் மட்டும் 100 நூல்களை நான் வெளியிட்டு இருக்கிறேன். தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியாக அதுதான் இருக்கும் என்று நான் கருதுகிறேன். நிரந்தரமாக புத்தகப் பூங்கா அமைக்க சென்னையில் இடம் வழங்கப்படும் என்று முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் அறிவிப்பு செய்தார்கள். 'அதனை நினைவூட்டி நானும் கடந்த ஆண்டு அந்த வாக்குறுதியை நினைவுபடுத்தி இருக்கிறேன். இடம் தேர்வு செய்யப்பட்டதும், அது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடுவேன் என்பதை மகிழ்ச்சியோடு இந்த நிகழ்ச்சியில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்குமாக எத்தனையோ சிறப்பான செயல்களை தமிழ்நாடு அரசு செய்து வருவதை எழுத்தாளர்கள், அறிஞர்கள், இலக்கிய இதழ்கள், சிறுபத்திரிக்கைகள், பொதுவெளியில் பாராட்டுகிறார்களா என்று எனக்குத் தெரியாது. யாரும் பாராட்டுவார்கள் என்பதற்காகவும் இத்தகைய செயல்களை நாங்கள் செய்யவில்லை.

DMK govt follows Dravidian model; equal development, equal opportunity for  all: MK Stalin - India Today

கடந்த ஓராண்டுகாலத்தில் தமிழுக்கும், எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் அத்தகைய அளவில்லாத ஆக்கப்பணிகளைத் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்பதை யாராலும் மறந்துவிடவும், மறுக்கவும் முடியாது.     எழுத்தும், இலக்கியமும் மொழியை வளர்க்கின்றன. வளர்ப்பது மட்டுமல்ல, காக்கின்றன. இதுபோன்ற புத்தகச் சந்தைகளும் இலக்கிய விழாக்களும் எழுத்தையும், இலக்கியத்தையும் இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டுவதற்காகப் பயன்பட வேண்டும். மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால் நம்முடைய அடையாளமே போய்விடும்.

அடையாளம் போய்விட்டால், தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை நாம் இழந்து விடுவோம். தமிழர் என்ற தகுதியை இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை. எனவே மொழியைக் காப்பதற்கான கடமை என்பது எங்களைப் போன்ற அரசியல் இயக்கங்களைப் போலவே எழுத்தாளர்களுக்கும் இருந்தாக வேண்டும். தங்களது எழுத்தை மொழிகாப்பதற்கான மக்கள் எழுத்தாகப் பயன்படுத்த வேண்டும் என்று இந்த நேரத்தில் அவர்களை எல்லாம் அன்போடு கேட்டு வாய்ப்பினை தந்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்” எனக் கூறினார்.