நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
ஸ்டாலின்

தமிழகத்தில் 2,500 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.50 கோடி நிதியை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற விழாவில் 1,250 கிராம கோயில்கள், ஆதி திராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,250 கோயில்களுக்கு நிதி வழங்கப்பட்டது.

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்களை மதத்திற்கு எதிரானவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். நாங்கள் மதவாதத்துக்கு தான் எதிரானவர்கள், மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. நாங்கள் மதவாதத்திற்கு எதிரானவர்கள். ஏளனமும், விமர்சனமும் செய்துகொண்டு இருக்கிறவர்களுக்கு இந்த விழாவும் மேடையும் சான்று. எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்க கூடாது, அதனால் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தோம். அனைத்து இறை தலங்களையும் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறோம்.


43,000 பழமை வாய்ந்த கோயில்களை பழமை மாறாமல் குடமுழுக்கு நடத்த உதரவிட்டேன். தற்போது வரை 3,986 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து துறையும் வளர வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. எல்லாருக்கும் எல்லாம். ஆனால் திராவிடம் என்ற சொல் பிடிக்காதவர்கள் மதத்தின் விரோதிகளாக எங்களை சித்தரிக்கின்றனர். திமுக ஆட்சிக்குவந்த பின் கோயில்களுக்கு ஏராளமான பணிகள் செய்துகொண்டிருக்கிறோம். இதற்காக வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆலோசனையின் கீழ் இந்த பணிகளை மேற்கொள்கிறோம். பழமை மாறாமல் கோயில்களை சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன, முதற்கட்டமாக 1000 ஆண்டுகள் பழமை வாந்த 112 கோயில்களில் திருப்பணிகள் நடைபெறவுள்ளன” எனக் கூறினார்.