ரூ. 75 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புப் பணிகள் - முதல்வர் நேரில் ஆய்வு!!

 
tn

செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (12.7.2022) செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நூக்கம்பாளையம் மேம்பாலம், அரசன்கழனி ஏரி மற்றும் மதுரப்பாக்கம் ஓடை - தெற்கு டி.எல்.எப் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து, நிவரணப் பணிகளை துரிதப்படுத்தி, வரும் பருவமழை காலங்களில் மக்களுக்கு மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி தமிழகமெங்கும் வெள்ளத் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
செம்மஞ்சேரி மற்றும் டி.எல்.எப். வளாகம் ஆகிய பகுதிகள் கடந்த பருவமழையின் போது வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அப்பகுதிகளுக்கு வெள்ளப் பாதிப்பிலிருந்து நிரந்தர தீர்வு காணும் வகையில், திட்டங்கள் தீட்டப்பட்டு வெள்ளத் தடுப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

tn

அதன்படி, சென்னை மாவட்டம் - சோழிங்கநல்லூர் வட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் - தாம்பரம் வட்டம், பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரியில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கால்வாய்க்கு இருபுறமும் 24 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தாங்கு சுவர் கட்டும் பணியில், நூக்கம்பாளையம் மேம்பாலத்தில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இவ்வெள்ளத் தடுப்புப் பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். பின்னர், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசன்கழனி வேலன்தாங்கல் ஏரி முதல் கழுவெளி வரை மூடுதளத்துடன் கூடிய பெருவடிகால் கால்வாய் கட்டும் பணியில், அரசன்கழனி ஏரியில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

tn

அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டத்தில் 21 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதுரப்பாக்கம் ஓடையிலிருந்து டி.எல்.எப். வளாக சாலையில் 500 மீட்டர் வரை அவசரக்கால வெள்ளநீர் கடத்தும் பெருவடிகால் அமைக்கும் பணியில், மதுரப்பாக்கம் ஓடை, தெற்கு டி.எல்.எப். பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இப்பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.