300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் கட்டடங்கள் - முதல்வர் திறந்து வைத்தார்!!

 
tn

பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் கூடுதலாக 300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் கூடுதலாக 300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகரில் 1974-ஆம் ஆண்டு அரசு அலுவலர் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டது. அரசுப் பணியில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு பெறும் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் பணியில் சேர்ந்தவுடன், அலுவலகப் பணியில் செம்மையாகவும், திறம்படவும் செயல்பட, அவர்களுக்கு அலுவலக நடைமுறை, பணி நடைமுறை, பொதுமக்கள் தொடர்பு, ஊடக வளர்ச்சி, கணக்கு ஆகியவை குறித்து அடிப்படைப் பயிற்சி அளித்து அவர்களது பணித்திறனை மேம்படுத்தி அரசு நிர்வாகத்தை வெற்றிகரமாக செயல்படுத்திட வைப்பதே இப்பயிற்சி நிலையத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

tn

பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் சுமார் 700 நபர்கள் தங்கி அடிப்படை பயிற்சி பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 300 பயிற்சியாளர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் 15 கோடி ரூபாய் செலவில் நான்கு நவீன வகுப்பறைகள், இரண்டு தங்கும் விடுதிகள், ஒரு உணவருந்தும் கூடம், ஒரு பல்நோக்கு அரங்கம் ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கூடுதலாகக் கட்டப்பட்டுள்ள இந்த இரண்டு விடுதிகளிலும், மாற்றுத்திறனாளி பயிற்சியாளர்களும் எவ்வித இடர்பாடுகளுமின்றி எளிதில் தங்கி பயிற்சிபெறும் வகையில் தனி அறைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சியாளர்களுக்கு சிறந்த கற்கும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய நான்கு நவீன வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

tn

புதிய பல்நோக்கு அரங்கில் ஒரே சமயத்தில் 1500க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களுக்கு உடற்பயிற்சி, யோகா பயிற்சி, கருத்தரங்குகள், சிறப்பு வகுப்புகள் போன்றவை நடத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பு வசதிகள் மூலம் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பணியாளர்களுக்கு சிறந்த பயிற்சியினை வழங்கி அவர்களைத் திறன்மிகுந்தவர்களாகவும், சேவை நோக்கம் கொண்டவர்களாகவும் மாற்றி, அரசு நிர்வாகத்தினை மேலும் வலுப்படுத்தக்கூடியதாக அமையும்.