தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

 
vaiko

மத்திய அரசு ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் எனவும், அதை செய்யாவிட்டால் மத்திய அரசும் ஆளுநரின் இந்த செயலுக்கு உடந்தையாக இருக்கிறது என்று அர்த்தம் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

நெல்லை ரெட்டியார்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறித்து, தமிழக அரசு எழுதிகொடுத்த வார்த்தைகளை வாசிக்காமல் ஆளுநர் தவிர்த்தது குறித்தும் செய்தியாளர்காள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய வைகோ கூறியதாவது: ஆளுநர் சட்டமன்றத்தில் நடந்துகொண்ட முறை இதுவரை எந்த மாநிலத்திலும் எந்த ஆளுநரும் நடத்தாத ஒன்று. ஆளுநர் அநாகரீகமான செயலில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை உடனே வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசின் கொள்கைகள், சாதனைகளை மக்களுக்கு அறிவிக்கும் உரை தான் ஆளுநர் உரை. அப்படிப்பட்ட உரையை வாசிக்காமல் அவராகவே சிலவற்றை சேர்த்து வாசித்து விட்டு அந்த உரைக்கு ஏற்கனவே மறுப்பு தெரிவித்ததாக அபண்டமான பொய்யை ஆளுநர் வட்டாரம் சொல்கிறது. 

தமிழ்நாட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட வேண்டும். ஆளுநர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். அதை செய்யாவிட்டால் மத்திய அரசும் ஆளுநரின் இந்த செயலுக்கு உடந்தையாக இருக்கிறது என்று அர்த்தம். இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 212-ன் படி சட்டமன்ற நடவடிக்கையில் நீதிமன்றமே தலைமுடியாது என நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். ஆனால் ஆளுநர் சட்டமன்றத்தில் கொண்டு வந்த 21 மசோதாக்களில் கையெழுத்து போடாமல் உள்ளார். இவ்வாறு கூறினார்.