இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெறும் - வைகோ பேட்டி

 
vaiko

ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினுடைய ஆதரவு பெற்றிருக்கின்ற காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினுடைய ஆதரவு பெற்றிருக்கின்ற காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சனாதன சக்திகளை ஊக்குவித்து இந்துத்துவா தத்துவத்தை நிலை நாட்டலாம் என்று கருதி தந்தை பெரியாரின் மண்ணில், பாரதீய ஜனதா கட்சியின் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. அவர்கள் கோடிக்கணக்கிலே பணம் செலவழிக்கலாம். ஆனாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. தமிழக ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசியலில் ஓய்ந்து போய், தோற்றுப் போனவர்களுக்கு பதவி கொடுப்பதற்காக இந்த ஆளுநர் பதவி, மாளிகைகள் உருவாக்கப்பட்டன. 

ஆளுநர் மாளிகைகளை ஏழை எளிய மக்களுக்கான மருத்துவமனைகளாக பயன்படுத்தலாம் என்று மகாத்மா காந்தி கூறினார். அதுபோல், மருத்துவமனைகளாக மாற்றலாம். தமிழக ஆளுநார் அரசியல் சட்டத்திற்கு புறம்பாக, அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பாக நாளும் பேசி வருகிறார். தமிழ்நாட்டை, தமிழகம் என்று சொல்லிவிட்டு, அதை மறைக்க வேண்டும் என்பதற்காக போலித்தனமான விளக்கங்களை கொடுக்கிறார். அதிலிருந்து அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது நன்றாக புரிகின்றது. இவ்வாறு வைகோ கூறினார்.