கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தை அடித்துக் கொலை

 
baby leg

ஒசூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் குழந்தையின் தாயாரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

murder

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தேர்ப்பேட்டையில் வசித்து வருபவர் நந்தினி(25), இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அவரது கணவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் பார்வதி நகரை சேர்ந்த ரஞ்சித் என்பவருடன் நந்தினிக்கு தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது. ஏற்கனவே மனைவியை பிரிந்த ரஞ்சித், நந்தினி மற்றும் அவரது 2 மகன்களுடன் வீட்டை விட்டு வெளியேறி ஓசூர் அடுத்த ஆலூர் கிராமத்தில் குடியேறினார். 

ரஞ்சித், நந்தினியின் மகன்களை அவ்வபோது அடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 6 வயது மூத்த மகனை விடுதியில் சேர்த்துவிட்டு, 3 வயதான இளைய மகன் ஜகனை மட்டும் உடன் வைத்துள்ளார்.  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக குழந்தை ஜகனை ரஞ்சித், கடந்த டிசம்பர் 6ம் தேதி பீர்பாட்டிலால் தலையில் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் படுகாயமடைந்த ஜகன்,  7ம் தேதி ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிசம்பர் 22 ம் தேதி ஒசூர் திரும்பினார். 

இந்நிலையில் கடந்த 27ம் தேதி குழந்தை உயிரிழந்ததாக ஒசூர், கோகுல்நகர் சுடுகாட்டில் குழந்தையை புதைத்துள்ளனர். இது வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக ரஞ்சித், நந்தினியை மிரட்டியதாக கூறப்படுகிறது. கடந்த 10ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்க நந்தினியின் தாய் வள்ளி, நந்தினி வீட்டிற்கு குடும்ப அட்டை வாங்க சென்றபோது இளைய மகன் குறித்து கேட்டுள்ளார். அப்போது ஜகன் இறந்துவிட்டதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த வள்ளி இதுக்குறித்து குழந்தையின் பெரியப்பா சுரேசிற்கு தகவல் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து ஒசூர் அட்கோ போலிசில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் கள்ளக்காதலன் ரஞ்சித், தாய் நந்தினி ஆகியோர் இருவரையும் நேரில் சுடுகாட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு புதைத்த குழந்தையை வருவாய் துறை அதிகாரிகள் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக ரஞ்சித் மற்றும் நந்தினியிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.