தென்காசி அருகே மலைப்பாதையில் லாரிகள் மோதி உருண்டு விழுந்து விபத்து

 
accident

தென்காசி அருகே கேரளாவில் இருந்து வந்த இரண்டு லாரிகள் மலைப்பாதையில் மோதி 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரு லாரியின் டிரைவர்களும் காயமடைந்தனர். 

கேரளாவில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று புளியரை எஸ் வளைவின் மேல் பகுதியில் இருந்து மலைப்பாதையில் கீழே இறங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் படு வேகமாக சாலையில் இறங்கி எதிரே வந்த மினிலாரி மீது மோதியதில் இரு லாரிகளும் மலைப்பாதையில் உருண்டு விழுந்தன. 

இதில் கேரளாவில் இருந்து வந்த லாரியின் டிரைவர் கரூரைச் சேர்ந்த வையாபுரி என்பவர் காயம் அடைந்தார். தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் டிரைவர் கட்டளை குடியிருப்பைச் சேர்ந்த முருகன் பலத்த காயமடைந்தார் . அவர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான லாரி ரயில் தண்டவாளத்தை ஒட்டி விழுந்ததால் அங்கு உடனடியாக மீட்பு பணிகள் துவக்கப்பட்டு இரவு ஏழு மணிக்கு ரயில் பாதை சீரானது.