செஸ் ஒலிம்பியாட்- 28ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியினை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் நடக்க உள்ளது. இதில், 187 வெளிநாடுகளில் இருந்து 2 ஆயிரத்து 500 வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால், சர்வதேச தரத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒன்றும் 22 ஆயிரம் சதுர அடியில் ஒன்றுமாக, நவீன விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், மொத்தம் 700 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் கடற்கரையோரம் விடுதிகளில் தங்குகின்றனர். ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான 28.07.2022 (வியாழக்கிழமை) சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணை வெளியிடப்படுகிறது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 27.08.2022 அன்று சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.