"ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒற்றுமை ஓங்க பொங்கல் கொண்டாடுவோம் " - சசிகலா வாழ்த்து

 
sasikala

பொங்கல் பண்டிகையையொட்டி சசிகலா தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்து கொண்டுள்ளார்.

இதுக்குறித்து சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உலகத் தமிழர்கள் எல்லோரும் உவகையுடன் ஒன்றாக இணைந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், திக்கெட்டும் வாழும் அன்புக்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்."உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்ற மகாகவி பாரதியாரின் சொல்லிற்கிணங்க, உழவுத் தொழிலைப் போற்றும் வகையில் இந்த இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்களது மன மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதத்தில் வீட்டிற்குள்ளும், வாசலிலும்வண்ணக்கோலங்களினால் அலங்கரித்து, புது பானைக்கு மஞ்சள் தழையினைக் காப்பாக அணிவித்து, அதில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கும் போது, "பொங்கலோ பொங்கல்" என்று உற்சாகக் குரலெழுப்பி கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல், கரும்பு, காய்கறிகள் முதலியவற்றை படையலிட்டு இறைவனை வழிபடுவார்கள்.

tn

அல்லும் பகலும் அயராது உழைத்து இவ்வுலகிற்கே உணவு வழங்கிடும் உழவர் பெருமக்கள் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அர்ப்பணித்தார்கள். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது எண்ணங்களை ஈடேற்றிடும் வகையிலும், உழவர் பெருமக்களுக்கு என்றென்றும் உறுதுணையாகவும், விவசாயத்தை அழிந்திடாமல் பாதுகாத்திடவும் நாம் ஒவ்வொருவரும், குறிப்பாக இளம் சமுதாயத்தினர் முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள், கொரோனா நோயின் தாக்கம் போன்ற எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியிலும் இந்த வேளாண் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற உழவர் பெருமக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திடவும், அவர்களுடைய வாழ்வாதாரம் மென்மேலும் உயர்ந்திடவும் இந்நன்னாளில் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். மேலும், ஜாதி மதம் போன்ற வேறுபாடுகளின்றி, இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என்று அனைவராலும் ஒற்றுமையோடும். சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடப்படுகின்ற இந்த அறுவடைத் திருநாளில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும், சகோதரத்துவம் தழைக்கவும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒற்றுமை ஓங்க மதநல்லிணக்கப் பொங்கலாய் நாம் அனைவரும் கொண்டாடுவோம்.

tn

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழரின் தன்மானம் தனித் தன்மையோடு நிகழ, தமிழர் தம் வாழ்வில் வளம் பெற்றிட, மக்களாட்சி விரைவில் மலர. தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வழி வகுக்க வேண்டும் என்று தெரிவித்து, உங்கள் அனைவரது இல்லங்களிலும் அன்பும், அமைதியும், செல்வமும், மகிழ்வும் பால் போல் பொங்கி வழிய வேண்டும் என்று என் மனதார வாழ்த்தி, பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.