மாவீரர் தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றுவோம் - ஓபிஎஸ்..

 
ops

சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, அவரது தியாகத்தை போற்றுவோம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரித்துள்ளார்.   

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இந்திய நாட்டின் விடுதலைக்காக பாரதம் முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து பாடுபட்டனர். இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாட்டிலும் பல தலைவர்கள் தோன்றி தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.  அவர்களில்  மிக முக்கியமானவர் தீரன் சின்னமலை அவர்கள். வாள், சிலம்பம், மல்யுத்தம் என அனைத்து போர்ப் பயிற்சிகளையும் கற்றுக் கொண்டதோடு,   தனக்கென ஒரு பாதை அமைத்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில்  ஆங்கிலேய ஆதிக்கத்தை தடுக்கும் பெருமலையாக விளங்கியவர்.   தீரன் சின்னமலை அவர்களை எளிதில் வெல்ல முடியாது என முடிவு செய்த ஆங்கிலேயப் படையினர் சூழ்ச்சியால் அவரை கைது செய்து, சங்ககிரி கோட்டைக்கு அழைத்துச் சென்று அவரை தூக்கிலிட்டனர்.  

தீரன் சின்னமலை சிலை

தீரன் சின்னமலை அவர்களை கௌரவிக்கும் வகையில் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  சென்னை, அண்ணா சாலையில் தீரன் சின்னமலை அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையை அமைத்ததையும்,  1995 ஆம் ஆண்டு தீரன் சின்னமலை அவர்களுக்கு காங்கேயத்தில் அரசு சார்பில் நினைவு விழாவினை நடத்தி, அவ்விழாவில் அவரது வாரிசுகளுக்கு மரியாதை செய்ததையும், அவரது நினைவு நாளான  ஆடி மாதம் 18 ஆம் நாளினை அரசு விழாவாக அனுசரிக்க உத்தரவிட்டதையும்,   மாவீரர் தீரன் சின்னமலையைத் தூக்கிலிட்ட இடமான, சங்ககிரியில், அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்துக் கொடுத்ததையும் அவரது நினைவு நாளில் நினைவுகூர்கிறேன்.  

ஓபிஎஸ்

இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக அவர் செய்த தியாகங்களை நினைத்துப் பார்த்து, அவருக்கு எனது மரியாதையினையும், வீர வணக்கத்தினையும் பணிந்து தெரிவித்துக் கொள்கிறேன். மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பெருமைமிக்க அடிச்சுவட்டில் நாமும் பயணித்து நாட்டுப் பற்றுடன் வாழ்வோம் என அவரது நினைவு நாளில் நாம் உறுதி ஏற்போம். மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்! அவர் வழி நடப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.