காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவை தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது - எல்.முருகன்

 
L Murugan

காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான பழமையான கலாச்சார தொடர்பினை மீண்டும் புதுப்பிக்கவும், கொண்டாடவும் காசி தமிழ்ச் சங்கம் விழா உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய கலாச்சாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் ஒளிபரப்பு ஆகிய அமைச்சகங்களும் உத்தரப்பிரதேச அரசும் இணைந்து செய்துள்ளன.   இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது .ஒரு மாதம் நடைபெறவிருக்கும் இந்த விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ஒரு மாத நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  

modi

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இசையமைப்பாளர் இளையராஜா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர். மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மிகவாதிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் உட்பட பல்வேறு பிரிவினர் பங்கேற்றனர்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் திருக்குறல் இந்தி மொழிப்பெயர்ப்பு புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். 

இந்த நிகழ்வில் வரவேற்பு உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புனித பூமியான வாரணாசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது. பாண்டிய மன்னன் அதிவீர ராம பாண்டியன் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்ட பின்னர், தமிழகத்திற்கு திரும்பி தென்காசியில் பெரிய சிவாலயத்தை நிறுவினார். காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவை காசிக்காண்டம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையே ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் ஒரு இருக்கை அளித்து பிரதமர் மோடி பெருமைப்படுத்தினார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.