சைதை சாதிக், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார்

 
kushboo

தன்னை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மற்றும் அதனை வேடிக்கை பார்த்த அமைச்சர் மனோ தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி மகளிர் ஆணையத்தில் நடிகை குஷ்பு புகார் அளித்துள்ளார். 

சென்னை ஆர்.கே.நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய, திமுக மாநில பேச்சாளர் சைதை சாதிக் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நடிகை குஷ்பு வெளியிட்ட டுவீட்டுக்கு, டுவிட்டரிலேயே மன்னிப்பு கேட்டார் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி. இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து நடிகைகள் மற்றும் பெண்களைப் பற்றி இழிவாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இதேபோல் சைதை சாதிக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  


இந்நிலையில், நடிகை குஷ்பு இன்று டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் சைதை சாதிக்கின் பேச்சுக்கான வீடியோ ஆதாரத்தையும் இணைத்து கொடுத்துள்ளார். குஷ்பு தனது புகாரில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

kushboo

 இதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது: எனக்கே இந்த கதி என்றால் மற்ற பெண்களுக்கு தமிழகத்தில் என்ன கதி ஏற்படும்? அமைச்சர் பொறுப்பில் இருக்கும் மனோ தங்கராஜ் தூங்கி விழித்து 4 நாள் கழித்து நான் விளம்பரம் தேடுவதாக கூறி இருக்கிறார். அதை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது.  எனக்கு இனி விளம்பரம் தேவையில்லை. நானும், அவரும் பொது வெளியில் நின்றால் அவரை எத்தனை பேருக்கு அடையாளம் தெரியும்? அவருக்குத்தான் இப்போது விளம்பரம் தேவை. அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில் தான் இவ்வளவு அநாகரீகமாக பேசி உள்ளனர். அதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்த அமைச்சர் தனியாக அழைத்து கண்டித்ததாக கூறுகிறார். உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படி விமர்சித்து விட்டு தனியாக அழைத்து கண்டித்தால் ஏற்பீர்களா? என்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. நடவடிக்கை தான் தேவை. அமைச்சர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சைதை சாதிக்கை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.