ராகுல் காந்திக்கு பிரதமர் ஆகும் தகுதி இல்லை - குஷ்பு பரபரப்பு பேச்சு

 
Kushboo

காங்கிரஸ் கட்சி இனி எந்த காலத்திலும் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது எனவும் ராகுல் காந்திக்கு பிரதமர் ஆகும் தகுதி இல்லை எனவும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் என்பது கிடையாது. ஜனநாயக ரீதியாக எதுவும் நடப்பதில்லை. நான் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அடுத்து யாரை தலைவராக்கலாம் என்று கேட்பார்கள். நான் உள்பட பலர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பெயரை சொன்னோம். உடனே எல்லோரும் என் மீது பாய்ந்து விட்டார்கள். நான் பதவியில் இருக்க மாட்டேன் என்பார். அதன் பிறகு பலரும் அவரிடம் போய் கெஞ்சி தலைவர் பதவிக்கு அழைத்து வரவேண்டும். அப்படி ஒரு நாடகம் நடத்துவார்கள். காங்கிரஸ் மீது மக்களும், கட்சியினரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது. ராகுலுக்கு பிரதமர் ஆகும் தகுதியும் இல்லை. அப்படி ஒரு வாய்ப்பை மக்கள் ஒரு போதும் வழங்க மாட்டார்கள். வெறும் டுவிட்டரில் மட்டும் தப்பும், தவறுமாக எழுதுவதால் பிரதமராகி விட முடியுமா? இவ்வாறு கூறினார்.