கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

 
therottam

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது
 
108 வைணவ திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலமாக விளங்குவது கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி ஆலயமாகும். இவ்வாலயத்தின் சித்திரத்தேர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராக விளங்குகிறது. கடந்த ஆறாம் தேதி இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணம் கோமல வள்ளி சமேத சாரங்கபாணி சுவாமி ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாரங்கபாணி சுவாமியின் ஜென்ம நட்சத்திர தினமான சித்திரை மாதம் பவுர்ணமி நாளன்று திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 8.30 மணியளவில் தொடங்கியது.  முன்னதாக இன்று விடியற்காலை ஸ்ரீதேவி - பூதேவி சமேத சாரங்கபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சந்தன காப்புடன் பச்சைக் கல் கிரீடம் தரித்து ராஜ அலங்காரத்துடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாரங்கா -சாரங்கா என்று பக்தி முழக்கமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர்.

therottam

கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. தற்போது திருத்தேருக்கு ரூ 10 லட்சம் செலவில் தேர் சீலைகள் உள்ளிட்ட அலங்கார பொருள்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள இந்த தேர்,  காண்பவரை கவரும் வகையில் அமையப் பெற்றுள்ளது.  இத்தேர் 110 அடி உயரமும் 500 மெ.டன் எடையும் கொண்டது.  திருத்தேரோட்டத்தை காணவும் வடம் பிடித்து இழுத்துச் செல்லவும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராமான பக்தர்கள் சாரங்கா -சாரங்கா என பக்தி கோஷமிட்டு இழுத்து செல்கின்றனர். திருத்தேர்  சுமார் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள தேரோடும் வீதிகள் வழியாக ஆடி அசைந்து செல்கிறது. அறநிலையத் துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம், மின்சார துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, தீயணைப்பு துறை, சுகாதார துறை என பல்வேறு அரசு துறையினரின் ஒத்துழைப்புடன் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை திருத்தேர் நிலைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது