குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வருகிற 26ம் தேதி தொடக்கம்

 
Kulasekaran pattinam

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வருகிற 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் உலக புகழ்பெற்ற கோயில் ஆகும். இங்கு நடைபெறும் தசரா திருவிழா, மைசூருக்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தசரா திருவிழா கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. 

dasara


 
இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி காலை 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. முதலாம் திருநாளில் அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் கைகளில் திருக்காப்பு அணிவிக்கப்படுகிறது. காப்பு அணியும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துகின்றனர். விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான அக்டோபர் 5ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது.