தரம் உயர்த்தப்படும் கோயம்பேடு சந்தை.. ஆய்வறிக்கை தயார் செய்யப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்..

 
  அமைச்சர் சேகர்பாபு தகவல்!

கோயம்பேடு சந்தையை ரூ. 20 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை, இந்து சமய அறநிலையத்துறை  அமைச்சர் சேகர் பாபு இன்று (ஜன.8) நேரில் ஆய்வு செய்தார்.  அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிஎம்டிஏ சார்பில் 21 ஏக்கர் பரப்பளவில் உள்ள வணிக வளாக அங்காடியை ஆய்வு செய்தோம். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கோயம்பேடு வணிக வளாக அங்காடியில் பூ மார்க்கெட்டில் ஏற்கனவே திறக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் ஊழியர்கள் தங்கும் விடுதி, தானிய கிடங்கு, உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆய்வு செய்தோம்.

 கோயம்பேடு சந்தை

கோயம்பேடு வணிக வளாகத்தை தரம் உயர்த்த ஒதுக்கப்பட்ட 20 கோடி நிதியை பயன்படுத்துவது, OSR (Open space reserve) பகுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, மியாவாகி காடுகளை மேம்படுத்துவது ஆகியவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பிப்ரவரி மாதம் வரை 4 கட்டங்களாக தொடர்ந்து கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்ய உள்ளோம். ஆய்வை முடித்து பிறகு செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான அறிக்கையை தயார் செய்யப்படும்.

அமைச்சர் சேகர்பாபு

கோயம்பேடு அங்காடிக்கு மட்டும் தனி காவல் நிலையம் அமைக்க முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த திட்டம் தயாரிக்கபட்டு விரைவில் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பண்டிகை காலத்தில் சிறப்பு அங்காடிகளில் இடைத்தரகர்களின் தலையீட்டை நிச்சயம் தடுப்போம். திருமழிசை மொத்த சந்தை பணிகள் முடியும் நிலையில் உள்ளது. கோயம்பேடில் உள்ள கடைகளை அங்கு இடமாற்றம் செய்வது குறித்து, வியாபாரிகளுடன் ஆலோசனை செய்து, முதல்வரின் கருத்துகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.