கொடநாடு கொலை கொள்ளை வழக்கு : கைதான இருவரின் ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் ..

 
kodanad

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சாட்சியங்களை கலைத்ததாக கைதான கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் ரமேஷ்  ஆகியோரின் ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.  கவலாளியை  கொலை செய்துவிட்டு, மர்ம கும்பல் ஒன்று  பங்களாவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.  இந்த சம்பவம் தொடர்பாக  வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார்,  மனோஜ், சயான், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்ளிட்ட  10 பேரை கைது செய்தனர்.

கொடநாடு

இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ்,  2017ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்.  கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ் திடீரென  தற்கொலை செய்து கொண்டார்.  திரைப்பட பாணியை மிஞ்சும் அளவிற்கு அரங்கேறிய இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களால் இந்த வழக்கு மேலும் சிக்கலானது.   இதனையடுத்து கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் மாதம் மறுவிசாரணை தொடங்கியது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழுவாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சென்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் , கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஊட்டியிலேயே தங்கியிருந்து  ஒவ்வொரு திங்கட் கிழமையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனையும் விதித்திருந்தது.  இந்நிலையில் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், ஊட்டியில் தங்கியிருக்க வேண்டும் என்கிற நிபந்தனையை ரத்து செய்யக் கோரி தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், இருவரது ஜாமீன் நிபந்தனையில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  அதாவது மனுதாரர்களான தனபால், ரமேஷ் ஆகிய  இருவரும் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15ஆம் தேதிகளில் மட்டும் காலை 10.30 மணிக்கு சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனைகளை தளர்த்தியுள்ளார். மேலும், நீலகிரி நீதிமன்றத்திடம் அனுமதி பெறாமல், இருவரையும் காவலில் வைத்து விசாரிக்க கூடாது என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.