முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஓராண்டு சாதனை.. வெற்றியின் உயரம் அளவிடற்கரியது - கி.வீரமணி புகழாரம்..

 
முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஓராண்டு சாதனை.. வெற்றியின் உயரம் அளவிடற்கரியது - கி.வீரமணி புகழாரம்..

சமூநீதிக்கான சரித்திர நாயகர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு சாதனை, வெற்றியின் உயரம் அளவிடற்கரியது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திராவிடமுன்னேற்றக்கழகம் கூட்டணி கட்சிகளோடு  இணைந்து போட்டியிட்டு  தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 07.05.2021  அன்று ஆட்சியமைத்தது. ஓராண்டு நிறைவு செய்யும் ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடு ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும்  பரவியுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் ஓராண்டிலேயே 207 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 mk stalin
ஆட்சிப் பொறுப்பேற்று கோட்டைக்குச் சென்ற நிலையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4000 கரோனா நிவாரண நிதி;
அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம்; ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு; மக்களின் மனுக்கள்மீது தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்;’  முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவர்களுக்கும் பொருந்தும் - இவற்றிற்கு எடுத்த உடனேயே ஒப்புதல் அளித்தார்,  மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்,  முதன் முதலாக வேளாண் துறைக்கு என தனியாக நிதிநிலை அறிக்கை,  கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக சுமார் 55 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி ரத்து;

கூட்டுறவு வங்கிகள்மூலம் வழங்கப்பட்ட 5 சவரனுக் குட்பட்ட ரூ.5,250 கோடி நகைக் கடன்கள் தள்ளுபடி,  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு,  அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்துத் தொழில் கல்வி இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு,  திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை - 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்தச் சலுகை.

veeramani

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் மொழி தேர்ச்சி கட்டாயம்.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி இரு மசோதாக்கள் (ஆளுநரிடம் போராடி, கடைசியாக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வைத்தது).மருத்துவத் துறை முதுகலைப் பட்டப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்காக சட்டப் போராட்டம் நடத்தி அகில இந்தியாவிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பயன் அடையச் செய்த பெரும் சாதனை, தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட பொருளாதார நிபுணர்கள் குழு;

வீரமணி

  ‘நீட்’ தேர்வு எதிர்ப், தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநிலத்துக்கென புதிய கல்வித் திட்டம் உருவாக்கம்.மாநில உரிமைகளுக்கான குரல் - மத்திய அரசு என்ற சொல்லாடலை நீக்கி - ஒன்றிய அரசு என விளித்தல் ; பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்பு,  மீண்டும் உழவர் சந்தை புனரமைப்பு, அரசின் முதல் மூன்று மாதங்களை கரோனா பாதிப்புகளை சரிசெய்வதில் கவனம் செலுத்தினர். அடுத்ததாக இரண்டு மாதங்கள் மழை, வெள்ள பாதிப்புகளை சீர் செய்வதில் சென்றது.  தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னதில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ஸ்டாலின் -வீரமணி

தமிழ்நாடு அரசின் முக்கியமான சவாலாக உள்ளது என்னவென்றால், ஒன்றிய அரசிடம் இருந்து பங்குத்தொகை, நிதியுதவி எதுவும் சரிவர கிடைப்பதில்லை என்பதே. ஆனால் இந்த கடுமையான சூழலிலும் அரசு சவால்களை எதிர்கொண்டு இயன்றவரை சிறப்பாக  பணியாற்றுகிறது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக அய்க்கிய அரபு நாடுகளிலிருந்து தொழில் முதலீட்டுத் தொகை ரூ.6,100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். இன்னும் நான்கு ஆண்டுகளில் குவிய இருக்கும் சாதனை மலைகளின் முன் எதிர்க்கட்சிகளும், மதவாத ஆதிக்க சக்திகளும் கண்ணுக்கே தெரியமாட்டார்கள் என்பது உறுதி! சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் மனம் - மணம் நிறைந்த வாழ்த்துகள்! ” என்று குறிப்பிட்டுள்ளார்