காயலான் கடை பேருந்தை கொண்டு வந்து அவர்களே எரித்தார்கள்- வேல்முருகன் பரபரப்பு

 
ப்

கள்ளக்குறிச்சி வன்முறையில் பள்ளி  பேருந்துகளும் போலீஸ் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில்  அந்த பேருந்துகள் எல்லாம் காயலான் கடை பேருந்துகள்.  அவர்களே தீ வைத்துக் கொளுத்தினார்கள் என்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் சக்தி மெட்ரிக்  பள்ளி இயங்கி வருகிறது .  இப்பள்ளியின் மேல் தளத்திலேயே விடுதியும் இயங்கி வருகிறது.  இங்கு விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ஆம் தேதி அன்று தரை தளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார். ஸ்ரீமதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது .

மாணவியின் இறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17ஆம் தேதி அன்று பெரும் போராட்டம் வெடித்தது.   இந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது.   இதனால் பள்ளி வாகனங்கள்,  போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன.  பள்ளியில் உள்ள ஆவணங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.   இது குறித்த கைது, விசாரணை, வழக்கு நடந்து வருகிறது.

வ்

இந்நிலையில்,  மாணவி ஸ்ரீமதி குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வேல்முருகன் இன்று நேரில் சென்றார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  நீதி கேட்டு அமைதியான வழியில் தான் போராடினார்கள். பேருந்தை எரித்ததாக சொல்கிறார்கள்.  அதை இன்சூரன்ஸில் வாங்கிக் கொள்ளலாம்.  பெஞ்சுகளை எடுத்துச் சென்றதாகச் சொன்னார்கள்.  அதையும் திருப்பித் தந்து விட்டார்கள்.  இப்போது மாணவியை உயிருடன் கொண்டு வந்து விட முடியுமா? என்று கேட்டார்.

அவர் மேலும்,   66 பேருந்துகள் பள்ளியில் நின்றது 6 பேருந்துகளை எரித்ததாக சொல்கிறார்கள் .  மீதமுள்ள 60 பேருந்துகள் எங்கே சென்றன? ஏதோ காயலான் கடை பேருந்துகளை கொண்டு வந்து நிறுத்தி உள்ளே இருந்த ஆட்களை விட்டே அடித்து உடைத்து இருக்கிறார்கள். எரித்திருக்கிறார்கள்.  பேருந்து சாவி , டிராக்டர் சாவி யாரிடம் இருந்தது?  அது மாணவி மரணத்திற்கு நீதி கேட்டவர்கள் செய்த காரியம் அல்ல.  பள்ளிக்கு வேண்டப்பட்ட கும்பலே செய்திருக்கலாம் . அந்த கோணத்திலும் போலீசார் விசாரிக்க வேண்டும். 

 பாவம்,  சாலையில் சென்றவர்கள் நீதி கேட்க வந்தவர்கள் எல்லோரையும் கைது செய்து 17 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வதை  ஏற்றுக் கொள்ள முடியாது . அவர்கள் மாணவர்களாக இருந்தால் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை அணுகி உடனடியாக விடுவிக்க வேண்டும்.   ஒரு மாணவியின் உயிர் அவ்வளவு எளிதானது அல்ல.  பள்ளி கல்வித்துறை அமைச்சர் நீதியின் பக்கம் இருக்க வேண்டும் என்றார்.