கனியாமூர் பள்ளி கலவரம் : 67 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்புப் பணிகள் தொடக்கம்..

 
kallakurichi

மாணவி தற்கொலையால் கலவரம் உண்ட கனியாமூர் தனியார் பள்ளியில் 67 நாட்களுக்கு பிறகு காவல்துறையினரின் பாதுகாப்புடன் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியது விரைவில் பள்ளி வழக்கம் போல் செயல்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.  

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை  மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.  இதையடுத்து,  மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதே மாதம் 17 ஆம் தேதி ஏராளமான  இளைஞர்களும், அப்பகுதி மக்களும் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அந்தப் போராட்டம்  கலவரமாக மாறி,  போராட்டத்தில் ஈடுபட்ட  இளைஞர்கள் 20க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்.  வகுப்பறைகள், அலுவலக அறைகள் என அனைத்தையும் சூறையாடிய போராட்டக்காரர்கள், நாற்காலிகள் மேசைகளை அடித்து நொறுக்கினர்.

கனியாமூர் பள்ளி கலவரம் : 67 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்புப் பணிகள் தொடக்கம்..

இதில்  பள்ளியில் பயின்ற மாணவர்களின் சான்றிதழ்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டன.   பின்னர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மூடப்பட்டது. இந்த கலவரத்தினால் இசிஆர் இன்டர்நேஷனல் என்னும் சிபிஎஸ்இ பள்ளியும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் அப்பள்ளியில் படித்துவந்த 3,000க்கும் மேற்பட்ட மற்ற மாணவர்களின் நிலை குறித்து, பெற்றோர்  கவலை கொண்டனர்.  பின்னர் அரசு உதவியுடன் அந்தப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்தக் கலவரம் காரணமாக  பள்ளி வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி பள்ளி

இதனையடுத்து சீரமைப்பு பணிகளை  மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனு மீது பத்து நாட்களுக்குள் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்பேரில்  45 நாட்களுக்குள் மறு சீரமைப்பு பணிகளின் முடிக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன், பள்ளி   நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். சீரமைப்பு பணிகளைத் தவிர வேறு பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதன்படி 67 நாட்களுக்குப் பிறகு இன்று  இன்று போலீஸாரின்  பலத்த பாதுகாப்பு மத்தியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பள்ளி முமுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.