கனியாமூர் பள்ளி விவகாரம் : கள்ளக்குறிச்சி அட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்...!!

 
கனியாமூர் பள்ளி விவகாரம் : கள்ளக்குறிச்சி அட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்...!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் படித்துவரும் மாணவர்களின் பெற்றோர் 300க்கும் மேற்பட்டோர் திடீரென ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை  மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.  இதையடுத்து,  மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதே மாதம் 17 ஆம் தேதி   ஏராளமான  இளைஞர்களும், அப்பகுதி மக்களும் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அந்தப் போராட்டம்  கலவரமாக மாறி,  போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 20க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்.  வகுப்பறைகள், அலுவலக அறைகள் என அனைத்தையும் சூறையாடிய போராட்டக்காரர்கள், நாற்காலிகள் மேசைகளை அடித்து நொறுக்கினர்.

கள்ளக்குறிச்சி பள்ளி

இதில்  பள்ளியில் பயின்ற மாணவர்களின் சான்றிதழ்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டன.   பின்னர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மூடப்பட்டது. இந்த கலவரத்தினால் இசிஆர் இன்டர்நேஷனல் என்னும் சிபிஎஸ்இ பள்ளியும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் அப்பள்ளியில் படித்துவந்த 3,000க்கும் மேற்பட்ட மற்ற மாணவர்களின் நிலை குறித்து, பெற்றோர்  கவலை கொண்டனர்.  பின்னர் அரசு உதவியுடன் அந்தப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியை உடனே திறக்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகளின் பெற்றோர் கள்ளக்குறிச்சி   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன் அறிவிப்பின்றி குவிந்தனர்.

கனியாமூர் பள்ளி விவகாரம் : கள்ளக்குறிச்சி அட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்...!!

திடீரென அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலவரம் நடந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் பள்ளி திறக்கப்படாததால்  மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும்,  ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களால் போதிய அளவு கல்வி கற்க முடியவில்லை என்றும் பெற்றோர் கூறுகின்றனர்.  இந்த முற்றுகையின் போது  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் இல்லாத காரணத்தால்,  அங்கிருந்து அலுவலக ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.  தொலைபேசி வாயிலாக இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் பிற்பகல் 3 மணி அளவில்,  பெற்றோர் தரப்பில் 10 பேரை சந்திப்பதாகவும்,  அதன் பிறகு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது