ரசிகர்கள் மகிழ்ச்சி! சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் உலகநாயகன் கமல்ஹாசன்

 
kamal-haasan-344

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.  

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடரில் பங்கேற்று வரும் கமல்ஹாசன்,  இந்தியன்- 2 படப்பிடிப்பிலும் பங்கேற்று நடித்து வருகிறார்.  தவிர மக்கள் நீதி மையம் கட்சி பணியிலும் தொடர்கிறார்.  கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றிருந்த கமல்ஹாசன்,  இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்து பேசினார். அங்கு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு, நேற்று முன் தினம் மதியம் சென்னை திரும்பினார். 

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள  ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் நலமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையின் வாயிலாக நேற்று  தெரிவித்து இருந்தது. இந்நிலையில், சிகிச்சை முடிந்து நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். மேலும் வீட்டிலேயே அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.