கள்ளக்குறிச்சி கலவரம் - 2 நாட்களுக்கு முன்பாகவே எச்சரித்த உளவுத்துறை!!

 
tn

கள்ளக்குறிச்சி கனியாமூர் கிராமத்தில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில்  இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது.  மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதுடன் மாணவர்களின் கல்வி சான்றிதழ்களையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டதால் கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் இந்த விவகாரத்தில் 350ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணையில் இறங்கியுள்ளது.

tn

இந்த சூழலில் தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஐஜி ஆக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது அமலாக்க பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார் . அதே சமயம் உளவுத்துறை புதிய ஐஜியாக செந்தில்வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கனியாமூர்  கலவரத்துக்கு உளவுத்துறையின் தோல்வியும் ஒரு காரணம் என விமர்சனம் எழுந்த நிலையில் உளவுத்துறை ஐஜி மாற்றப்பட்டார்.

tn

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாநில உளவுத்துறை எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  கலவரம் நடக்க வாய்ப்பிருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் , மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சேர்ந்து பள்ளியை சேதப்படுத்த வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி கலவரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.