கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு : பள்ளி நிர்வாகிகள் 5 பேரை ஒருநாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி..

 
கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு : பள்ளி நிர்வாகிகள் 5 பேரை ஒருநாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி..


கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான 5 பேரை ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூரில் செயல்பட்டு வந்த , சக்தி மெட்ரிகுலேஷன்  பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த  ஸ்ரீமதி என்கிற மாணவி  கடந்த 13 ஆம்  தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.   இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில்,  கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது.  இதில் அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது.  பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.   
இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்ட  300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி பள்ளி

முன்னதாக மாணவி  மரண வழக்கு தொடர்பாக பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர்,  இரண்டு  ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் 5 பேரும்  சேலம் மத்திய சிறையில்  வைக்கப்பட்டிருந்தனர்.  பின்னர் மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  இதனையடுத்து  சிபிசிஐடி போலீஸார்,   கைதான பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கு இன்று நீதிபதி புஷ்பராணி முன்பாக  விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதி முன்பாக  பலத்த பாதுகாப்புடன் பள்ளி நிர்வாகிகள் 5  ஆஜர்படுத்தப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு : பள்ளி நிர்வாகிகள் 5 பேரை ஒருநாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி..

அப்போது, கைதானவர்களை 3 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் கோரப்பட்டது.  ஆனால் நீதிபதி  5 பேருக்கும்  ஒருநாள் சிபிசிஐடி காவல் வழங்கி உத்தரவிட்டார். ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரையும் ஒரு நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும்   நாளை நண்பகல் 12.30 மணிக்கு 5 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்றும்   நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதனைத்தொடர்ந்து, விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு 5 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.