கள்ளக்குறிச்சி கலவரம்: வாகன பதிவெண் மூலம் வன்முறையாளர்களை நெருங்கும் போலீஸ்..

 
கள்ளக்குறிச்சி கலவரம்:

கள்ளக்குறிச்சி  பள்ளியில் நடந்த வன்முறையில் ஈடுபட பைக் மற்றும் பிற வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்டோரை சிறப்பு விசாரணைக் குழு அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில், மாணவி உயிரிழந்த  விவகாரம் குறித்து கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது.  இதில் அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது.  பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.  இதனையடுத்து   மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி கலவரம்  குறித்து  3 முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

 கள்ளக்குறிச்சி வன்முறைக்கு மாணவியின்  தாயாரே முழு காரணம் -  தனியார் பள்ளி செயலாளர் குற்றச்சாட்டு..

இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த குழுவில்  ஏற்கனவே  6 டி.எஸ்.பிக்கள், 9 ஆய்வாளர்கள், மூன்று சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில்  நேற்று  சிறப்பு புலனாய்வு  குழுவில்  மேலும் 56 போலீசாரை நியமனம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர், வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 12 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 56 பேர்  புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்த 56 பேரும்   சேலம் சரக டிஐஜி தலைமையிலான 18 அதிகாரிகளின் கீழ்  3 பிரிவுகளாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

 கள்ளக்குறிச்சி வன்முறை

இந்நிலையில், வன்முறையில் ஈடுபட பலர் பைக்குகள், கார்கள் போன்ற வாகனங்களில் வந்துள்ளது தொடர்பான வீடியோக்கள், சிசிடிவி காட்சிகளை சிறப்பு விசாரணைக்குழு கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.   வாகனங்களின் பதிவுஎண்களை வைத்து சுமார் 50-க்கும் மேற்பட்டோரை சிறப்பு விசாரணைக்குழு கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. காவல் துறையினர், வட்டாரப்போக்குவரத்துத்துறை அலுவலர்களுடன் இணைந்து   அவர்களை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.   அவர்களின் முகவரிகளை வைத்து கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  150-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வன்முறையாளர்கள் வந்து இருப்பதும் பள்ளியின் பின்புறம் வழியாகவும் அதிகமான பேர் நுழைந்து இருப்பதும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது.