”கருத்து கந்தசாமி அண்ணாமலை ஸ்ரீமதி மரணத்தில் மட்டும் கருத்து தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது”

 
ks alagiri

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செங்கம் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெறவுள்ள ஒற்றுமை பாதயாத்திரை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

Congress leader KS Alagiri against release of Rajiv Gandhi killer convicts  - Congress- leader- KS Alagiri- Rajiv Gandhi assassination- convicts-  political parties- DMK- Perarivalan | Thandoratimes.com |

இந்த மண்டல நிர்வாகிகளுக்ககான ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற 7 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி- காஷ்மீர் வரை இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்தவும், ஒற்றுமையாக இருக்கும் இந்தியர்களை பிரிக்கும்  ஆர்எஸ்எஸ் தத்துவத்திற்கு எதிராகவும், இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்தத்தை கொண்டு வர உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

கனியாமூர் பள்ளி மாணவி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புக்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்த நிலையில் இதுவரை பாஜக தலைவர் எவ்வித கருத்தும் கூறவில்லை. அண்ணாமலை கருத்து கந்தசாமி போல அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் மாணவி மரணத்திற்கு மட்டும் இது வரை ஏன் கருத்தோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை. ஏற்கனவே ஒரு குழந்தை இறப்பிற்கு உச்சநீதிமன்றம் வரை சென்றவர்கள் கனியாமூர் பள்ளி மாணவி இறப்பிற்கு மட்டும் ஆர்வம் காட்டாமல் இருப்பதின் மர்மம் என்ன? ஆர்எஸ்எஸ் ஏன் மவுனமாக இருக்கிறது என்பதை அறிய தமிழக காங்கிரஸ் விரும்புகிறது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி 9.2 சதவீதம் இருந்தது. தற்போதுள்ள பாஜக ஆட்சியில் 7 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. கடன் வசூலில் இன்று வங்கிகள் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கின்றன. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மிகக் கடுமையாக குறைந்துள்ளது. அதனால் இந்த நாட்டின் பொருளாதாரம் மோடி ஆட்சியில் வீழ்ந்திருக்கிறது.  சமீப காலமாக டெல்லி, பீகார், மகாhஷ்டிரா, உள்ளிட்ட இடங்களில் அதாவது, எங்கெல்லாம் எதிர்கட்சி ஆட்சி செய்கிறதோ அங்கெல்லாம், அங்குள்ள எதிர்கட்சி ஆளுகின்ற இடத்திற்கு சென்று சோதனை செய்வதாகவும், ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்ற சோதனைகள் நடைபெறுவதில்லையே ஏன்?

கெஜ்ரிவால், சிவசேனா, மம்தா ஆகியோர் ஆளும் போது தான் தவறு நடைபெறுகிறதா? பாஜக ஆளும் மாநிலங்களில் தவறே நடக்கவில்லையா? விசாரணை அமைப்புகளை ஏவல் நாய்கள் போல் பாஜக அவிழ்த்து விடுகிறார்கள். ஜனநாயக முறையில் வெற்றி பெற்றவர்களை சர்வாதிகார முறையில் வீழ்த்த முயல்கிறார்கள். இதற்கெல்லாம் விரைவில் மக்கள் நல்ல பதில் சொல்வார்கள்” எனக் கூறினார்.