இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் அதிமுகவை அழித்துக்கொண்டிருக்கின்றனர் - கே.சி. பழனிசாமி

 
KC Palanisamy

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அதிமுகவை சிதைத்து கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுக பொது குழு கூட்டம் நடத்த ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் நேற்று காலை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  இதை அடுத்து திட்டமிட்டபடி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று  ஓ. பன்னீர்செல்வம் தரப்பும்,  எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.  

ops eps

இந்நிலையில், சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, அதிமுக வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள். கடந்த நான்கு ஆண்டுகளாக ஓபிஎஸ் - இபிஸ் தங்களுக்கு தகுந்தார் போல், கட்சியின் விதிகளில் பல மாற்றங்களை செய்துள்ளனர். ஒபிஎஸ் -இபிஎஸ் சுயநலத்தால் இவ்வளவு பெரிய சண்டை நடந்துள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து பேச கட்சியில் ஆள் இல்லை. இவர்களுடைய பிளவு பாஜக மற்றும் திமுகவுக்குத் தான் உதவும். அஇஅதிமுக-வின் எந்த அணியையும் சாராத பொது உறுப்பினர்களை வைத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தப்படும்  எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் அனைவரும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், இவர்களால் எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும். சின்னம் முடக்கினாலும் பரவாயில்லை தன்னையும் தன்னை சூழ்ந்திருப்பவர்களை பாதுகாக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அதிமுகவை சிதைத்து கொண்டிருக்கின்றனர்.