‘‘நந்தியே சற்றே விலகி இரும் பிள்ளாய்’’ ஆளுநருக்கு கி.வீரமணி அறிவுரை

 
K veeramani

ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்ப செயல்படவேண்டியவரே! மாறாக நடந்தால், ஆளுநரின் ஆணைகளை நீக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏற்கெனவே உள்ளது. எனவே, தமிழ்நாடு ஆளுநர், ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக ஆக்காமல், ஆட்சியின் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடாமல் செயல்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். 

K. Veeramani honoured with Dr. Narendra Dabholkar Memorial Award

இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றியத்தில் ஆளும் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா போன்ற அமைச்சர்களை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். அரசும், அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க.வும் நாட்டில் எதிர்க்கட்சிகளால்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தும் ஆட்சிகளை சரி வர நடத்தவிடாமல் குறுக்குசால் ஓட்ட மாநிலத்திற்கு அனுப்பப்படும் ஆளுநர்களைக் கருவியாகப் பயன்படுத்தி, அவ்வாட்சிகளை செயல்படவிடாமல் முட்டுக்கட்டை  போடும் ‘ஒத்துழையாமை’ செய்தும், அவ்வாட்சியினரையும், அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களையும் வெகுவாக ஆத்திரமூட்டி, ஏதாவது தொடர் கிளர்ச்சிகளைச் செய்ய வைக்கத் தூண்டி, ‘சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது’ என்ற சாக்குச் சொல்லி, குறுக்கு வழியில் ஏதாவது ‘‘அரசியல்’’ செய்யலாமா என்ற முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுநர் மாளிகையா - ஆர்.எஸ்.எஸ். அலுவலகமா? தமிழ்நாட்டிற்கு ஆளுநராக அனுப்பப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற மேனாள் காவல்துறை அதிகாரி, திட்டமிட்டே ‘ராஜ்பவன்’ என்ற ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம்போல ஆக்கி, ஆட்சியின் கொள்கை சார்ந்த நிலைப்பாட்டுக்கு எதிராகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஈடுபட்டு பேசியும் வருகிறார்! ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படி எடுத்த உறுதிமொழிக்கு எதிராகவே நாளும் தமது கடமைகளைச் செய்யாமல், வேறு ஒரு போட்டி அரசு நடத்திடும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகிறார்! இதேபோல, கேரளா, தெலங்கானா மற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்ட ஆளுநர்கள் தங்களது எல்லையைத் தாண்டி, அரசியல் நனி நாகரிகம் கடந்து நடந்து கொண்டிருக்கின்றனர்!

மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை ஆளுநர்கள் விரும்புகிறார்களா? தமிழ்நாடு, கேரளாவைப் பார்த்து, தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பிலும் இருக்கும் தமிழிசை தனது வரம்புக்கு மீறிப் பேசி, வம்பை விலைக்கு வாங்கி, நாளும் ‘தமிழ் வசையாக’ மாறிடும், கண்டிக்கத்தக்க நிலைப்பாட்டில் உள்ளார்!
இவர்கள் அரசமைப்புச் சட்டத்தையும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படி, ஆளுநர் அதிகாரம் எப்படி ஒரு குறிப்பிட்ட அதிகார வரம்புக்குள் உள்ளது என்பதையும் மறந்துவிட்டு, ‘தானடித்த மூப்பாக’ நடந்து வருவது, அரசமைப்புச் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் எதிரானதாகவே அமைந்துள்ளது. ஆளுநர்களுக்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கம் நடைபெறுவதை, அவர்கள் விரும்புகிறார்கள் போலும்!

20 மசோதாக்களையும் முடக்கியிருப்பது ஏன்? ஆளுநர் ஆட்சி நடைபெறுவதாகவே எண்ணிக்கொண்டு, தங்கள் இஷ்டம்போல் நடப்பதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்கிற குறைந்தபட்ச நியாயத்தைக்கூட மறந்துவிட்டு, சுழற்றிவிட்ட பம்பரம்போல் ஆடத் தொடங்கி, அரசியல் அவலத்தை நடத்துகிறார்கள்! தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி சுமார் 20 மசோதாக்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அவரது இசைவுக்கு அனுப்பப்பட்டதை - அப்படியே பல மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசுக்கும், அதன் ஆற்றல்மிகு முதலமைச்சர் - அமைச்சரவைக்கும் அவப்பெயர் ஏற்படுத்திட திட்டமிட்டுள்ளார் போலும்! இது மக்களின் நலம் சார்ந்த பணிகளுக்கு ஆளுநரே முட்டுக்கட்டைப் போடும் கேடான செயலாகும்.

தமிழ்நாட்டு மக்கள் இதனை நாளும் கூர்ந்து கவனித்துத்தான் வருகின்றனர்! எவ்வளவுக் காலத்திற்குப் பரிசீலனை? மக்கள் ‘அல்லற்பட்டு ஆற்றாது அழும் கண்ணீரைத் துடைக்கத்’ தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராமலும், திருப்பி அனுப்பாமலும் இருப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும். எடுத்துக்காட்டாக, ஆன்லைன் சூதாட்ட மசோதா - தற்கொலைகள் பெருகிடும் நிலையில், அச்சட்டத்திற்கு இசைவு தருவதில் ஏன் காலதாமதம்? பரிசீலனை என்பதாக எவ்வளவு காலத்தையும் ஆளுநர்கள் எடுத்துக்கொள்ள முடியாது - கூடாது என்பதை - பேரறிவாளன் வழக்கில் வலியுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம் - மண்டையில் அடித்ததுபோல் - தீர்ப்பில் குறிப்பிட்டதை இதே ஆளுநர் ஏனோ வசதியாக மறந்துவிட்டு ‘தானே ராஜா, எனதே ராஜ்ஜியம்‘ என்பதுபோல நடந்து வருகிறார்! இது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!

அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவரே ஆளுநர்! ‘‘மாநில  ஆளுநர் என்பவர் தனிப்பட்ட அதிகாரம் பெற்று செயல்படுபவர் அல்ல; அவரது ‘திருப்தி’ ‘’Pleasure of the Governor’’ என்பதற்கு ஏற்ப, அமைச்சரவையின் கருத்துப்படிதான் இருக்க முடியும் - தனிப்பட்டதல்ல அமைச்சரவையின் திருப்தியே ஆகும்‘’ என்று 1974-லேயே நடைபெற்ற  ஷெம்சேர்சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு வழக்கில் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வில், மூத்த நீதிபதி ஜஸ்டீஸ் திரு.வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆணித்தரமான தீர்ப்பு தந்துள்ளார்!
மேலே காட்டப்பட்ட தீர்ப்பு தெளிவாக்கியது! இது புரியாமல், கேரள ஆளுநர் ஆடுகிறார்; தமிழ்நாடு ஆளுநர் செயல்படுகிறார்!

Tamil Nadu: DMK, Allies Petition President to Sack Governor, Slam RN Ravi  for 'Communal Remarks'

ஆளுநர் ஆணைகளை ரத்து செய்யலாம்! அதுமட்டுமல்ல, இப்படி அரசமைப்புச் சட்டக் கடமைகளிலிருந்து வழுவி, முரணாக நடந்தால், அந்த ஆளுநர் ஆணைகளை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படலாம் என்பதற்கும் வழக்குகளின் தீர்ப்பு முன்னுதாரணமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, 2006 இல் ராமேஷ் பிரசாத் எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில், ஆளுநரின் நடவடிக்கை, தவறான நோக்கம் கொண்டதாகவும், உள்நோக்கம் கொண்டதாகவும் இருந்தால், அதை ரத்து செய்யலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அது பீகார் சட்டமன்றத்தினை கலைக்க அன்றைய ஆளுநர் பூட்டாசிங்கின் நடவடிக்கையை ரத்து செய்த தீர்ப்பின் பகுதியாகத் தெரிவிக்கப்பட்டது. பண்பாடுள்ள தமிழ்நாட்டில் ஆளுநர் இப்படியா நடப்பது? ஒன்றரை ஆண்டுகளாக, 5 ஆண்டுகளுக்கு மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த சிறப்பான மக்களாட்சியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி - இது நியமனப் பதவியல்ல! எனவே, மக்களின் கொதி நிலை மேலும் கொதித்துக் கொப்பளித்துக் கிளம்பிட தூண்டுதல், தூபம் போடுகிற மாதிரி வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்!

வேண்டாம் நந்தி அவதாரம்! அரசமைப்புச் சட்டப்படி-  159 ஆம் பிரிவின்படி எடுத்த வாக்குறுதியில் உள்ள ‘‘மக்கள் நலம் - மக்கள் வாழ்வு’’ (‘Well being of the People of the State’) என்ற சொற்களை மீண்டும் நினைவில் வைத்துக் கடமையாற்றுங்கள் ஆளுநர்  ரவி அவர்களே! உங்களுக்கு எஜமானர்கள் டில்லியில் இருக்கலாம். தமிழ்நாடு - ஆட்சிக்கு எஜமானர்கள் வாக்களித்த மக்களே! அதை மறந்து விடாதீர்கள் - கடமையாற்றுங்கள்! நந்தி அவதாரம் போடாதீர்கள்! ‘‘நந்தியே சற்றே விலகி இரும் பிள்ளாய்’’ என்று கூறிய தமிழ்நாடு இது - மறவாதீர்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.