10% இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு சரியல்ல.. உரிமைகளை பறிக்க வழிவகுக்கும் - முத்தரசன் கண்டனம்.

 
முத்தரசன்

 சமூகத்தில் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர். முத்தரசன் விமர்சித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 10 சதவித இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு சரியல்ல. இது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் பொருளாதார அடிப்படையை மட்டும் அளவுகோளாக கொண்டதும், அது உயர் சாதி பிரிவினருக்கு மட்டுமானதும் என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.  இட ஒதுக்கீடு கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படுவது சரியல்ல என்ற கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.

10% இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு சரியல்ல.. உரிமைகளை பறிக்க வழிவகுக்கும் - முத்தரசன் கண்டனம்.

இவை பழங்குடி, பட்டியல் இன இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை பறிக்க வழி வகுக்கும்.  இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத காலகட்டத்தில், இட ஒதுக்கீடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.  எனவே சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிரான இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.