பெண் எஸ்.பி வழக்கில் மாயமான ஆவணங்கள் - ஊழியர்களுக்கு மெமோ அனுப்ப நீதிபதி உத்தரவு..

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது . இந்த பாலியல் தொல்லை வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னாள் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ்க்கும், பெண் எஸ்பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ் அப் மெசேஜ் பதிவு, கால் அழைப்பு போன்ற முக்கிய ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசாரால் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த மூன்று முக்கிய ஆவணங்கள் மாயாமனதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த நீதிபதி புஷ்பராணி , கடந்த 24 ஆம் தேதிக்குள் கண்டுபிடித்து தர உத்தரவிட்டிருந்தார். ஆனால் மாயமான ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்புமாறு நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார். மேலும் முக்கிய ஆவணங்கள் மாயமானது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.