கிணற்றில் தலைகீழாக விழுந்த ஜேசிபி- ஏற்காட்டில் கோர விபத்து

 
jcb

சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் உள்ள  மாரமங்கலம்  கிராமத்தில்,  கிணற்றில் ஜேசிபி வாகனம் கவிழ்ந்து விழுந்ததில் வாகனத்தில் இருந்த மலைகிராம வாசி  உயிரிழந்தார். 

கோடை வாசஸ்தலமான ஏற்காடு மலையில் 67 மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மாரமங்கலம்  மலை கிராமத்தில்  வசிக்கும் செந்தில் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதர் மண்டி கிடந்ததால்,  இன்று  பொக்லின் இயந்திரம் கொண்டு அதனை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பொக்லின் வாகனத்தை சதீஷ்குமார் என்பவர் இயக்கி பணி மேற்கொண்டிருந்தார். அவருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த 60 வயது கரிய மலை என்பவர் கூலிக்கு  வேலை செய்து கொண்டிருந்தார். 

விவசாய நிலத்தில் உள்ள ஒரு பெரிய கிணற்றின் அருகில் ஜேசிபி வாகனத்தை நிறுத்தி, வாகனத்தின்  மண் வாரும் பக்கெட்  மூலம் கிணற்றில் உள்ள நீரை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது கிணற்றின் ஓரத்தில் இருந்த  கல்லுக்கட்டு சரிந்ததில்,  வாகனம் கிணற்றுக்குள் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில்  வாகனத்தின்  சதீஷ்குமார் மற்றும் கூலிக்கு வந்த  மாரமங்கலம் பகுதியை சேர்ந்த  கரிய மலை  என்பவரும் கிணற்றில் விழுந்தனர். கிணற்றில் 5 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் ஓட்டுனர்  சதீஷ்குமாருக்கு நீச்சல் தெரிந்ததால்  கிணற்றிற்கு மேலே வந்து விட்டார். கரியமலை மட்டும்  ஜேசிபி வாகனத்தின் அடியில் மாட்டிக் கொண்டதால்,  மேலே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலறிந்த  அக்கம்  பக்கத்தினர், காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து கரியமலையை மீட்க முயற்சித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கரியமலையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொக்லின் இயந்திரத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டிருந்த கரியமலையை சடலமாக மீட்டனர் . பின்னர் ஏற்காடு காவல்துறையினர் கரியமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.