ஓபிஎஸ்-ன் மௌனத்தால் ஜெயலலிதா மரணமடைந்தார் - கே.பி.முனுசாமி கடும் தாக்கு..

 
kp munusamy

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சையின்போது , ஓ.பன்னீர் செல்வம் மௌனமாக இருந்து சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் அவர் மரணமடைந்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.  

கிருஷ்ணகிரியில்  51-ம் ஆண்டு அதிமுக தொடக்க விழாவை முன்னிட்டு  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, கலந்து கொண்டு பேசினார்.  அப்போது,  “ஜெயலலிதா மறைவு குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கையில் அவருக்கு வழங்கப்பட்ட 75 நாள் சிகிச்சை தொடர்பாக யாரெல்லாம் உத்தரவு பிறப்பித்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.  ஜெயலலிதாவை தனது கட்டுப்பாட்டில் சசிகலா வைத்து கொண்டு இருந்துள்ளார் என்றும் பலநாடுகளில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் ஜெயலலிதாவை பரிசோதித்ததில் அவருக்கு இதய கோளாறு இருந்ததையும், அதற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.  

ops

ஆனால், அதற்கு  சசிகலா மறுத்துவிட்டார் என்றும் அதனை மருத்துவர்களும் ஏற்று கொண்டதாக கே.பி.முனுசாமி  கூறினார்.  பன்னீர்செல்வமும்,  சசிகலாவுக்கு ஆதரவாக மௌனமாக  இருந்ததால் தர்மம் செத்து விடுகிறது, ஜெயலலிதாவும் இறந்து விடுகிறார் என்றும் அவர் பேசினார்.  சிகிச்சை அளிக்க வேண்டிய அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகமும்  சசிகலா கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதாக கூறிய கே.பி.முனுசாமி,   ஜெயலலிதா குணமடைய வேண்டும் என்ற எண்ணம் சசிகலாவுக்கு இல்லை என்று தெரிவித்தார்.